'ச்சா.. 1 லட்சம் ரூபாய் பரிசு போச்சே!'... பப்ஜி பிரியர்களுக்கு ஏமாற்றம்!... 'பெற்றோர் ஆதரவு இல்லாததால்'... 'வைரல்' போஸ்டர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்திலேயே முதன்முறையாக சிவகங்கை மாவட்டத்தில், மாநில அளவிலான பப்ஜி விளையாட்டுப் போட்டி நடத்த இருந்த நிலையில், எதிர்ப்பு காரணமாக போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.

காரைக்குடி அருகே கல்லலில் உள்ள சௌந்தர நாயகி உடனுறை சோமசுந்தரேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு, மாநிலம் தழுவிய அளவில் பப்ஜி போட்டியை நடத்த, அப்பகுதியைச் சேர்ந்த அன்னை மொபைல்ஸ் கடை உரிமையாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
மார்ச் 5ம் தேதி முதல் 3 நாட்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்ட இந்தப் போட்டியில், காலை 9 மணி முதல் இரவு வரை விளையாட வேண்டும். இந்தப் போட்டியில், ஒரு குழுவுக்கு 4 பேர் வீதம் 600 குழுக்கள் என, மொத்தம் 2500 பேர் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த போட்டியில் வெற்றி பெற்றால் முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய், 2வது பரிசாக 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 3வது பரிசாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இளைஞர்களை அடிமையாக்கி அவர்களின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு கொண்டு போய் விடும் ஆபத்தான பப்ஜி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ள இந்த விளையாட்டுப் போட்டியை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.
இதனால், மாவட்ட ஆட்சியரகம் மற்றும் போலீஸாரிடம் தரப்பிலிருந்து, இந்த விளையாட்டுப் போட்டி குறித்து தங்களிடம் அனுமதி எதுவும் பெறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கடும் எதிர்ப்பு காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
