'அப்படி என்ன டா பாத்த'... '16 லட்சத்தை காணோம்'... 'ஆன்லைன் கிளாஸ்க்கு மொபைல் கொடுத்த தாய்'... சிறுவனின் பதிலால் ஆடிப்போன மொத்த குடும்பம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபையனின் படிப்பிற்காகத் தாய் மொபைலை கொடுத்த நிலையில், கணவரின் மொத்த சேமிப்பான 16 லட்சத்தை இழந்து கொண்டு நிற்கிறார். கோபத்தில் தந்தை எடுத்த முடிவு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவரின் 17 வயது மகன் பள்ளியில் படித்து வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பல பள்ளிகள் வகுப்புகளை ஆன்லைனில் நடத்தி வருகிறது. இதனால் அந்த மாணவனும் ஆன்லைன் வகுப்பு இருக்கிறது எனக் கூறி தனது அம்மாவின் ஸ்மார்ட்போனை கேட்டுள்ளார். அவரும் மகன் படிப்பிற்காக தானே கேட்கிறான் எனக் கூறி போனை கொடுத்துள்ளார்.
இதையடுத்து அந்த சிறுவன் பல மணி நேரம் மொபைல் போனிலேயே நேரத்தைக் கழித்துள்ளார். இதனைக் கவனித்த அந்த சிறுவனின் தந்தை ஏன் எப்போதும் மொபைலும், கையுமாக இருக்கிறாய் எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுவன் நான் ஆன்லைன் வகுப்பில் படித்து கொண்டு இருக்கிறேன் எனக் கூறியுள்ளார். இந்நிலையில் சிறுவனின் தந்தை எதேச்சையாகத் தனது வங்கிக் கணக்கைச் சோதனை செய்துள்ளார். அப்போது எதிர்காலத்திற்காகத் தான் சேமித்து வைத்திருந்த 16 லட்ச ரூபாய் துடைத்து எடுக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார்.
தனது மொத்த சேமிப்பும் காலியானது குறித்து தனது மகனிடம் விசாரித்துள்ளார். அப்போது தான் அந்த உண்மை வெளியில் வந்தது. ஆன்லைன் கிளாஸ் இருக்கிறது என்று மொபைலை வாங்கிய சிறுவன், பப்ஜி கேம்-ஐ விளையாடி வந்துள்ளார். அடுத்தடுத்த கட்டங்களை எட்டவும், புதிய அப்கிரேடுகளை செய்யவும் அவர் தனது பெற்றோரின் மூன்று வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறாக, ரூ.16 லட்சத்தை அந்தச் சிறுவன் செலவழித்துள்ளார். வங்கியிலிருந்து வந்த மெசெஜ்களை பெற்றோருக்குத் தெரியாமல் உடனே அந்த சிறுவன் அழித்துள்ளார்.
இந்த பதிலைக் கேட்டு மொத்த குடும்பமும் ஆடிப் போனது. என்ன செய்வது எனத் தெரியாமல், சிறுவனின் தந்தை காவல்நிலையத்திற்கு ஓடினார். நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போலீசார், கேமில் இழந்த பணத்தை மீட்பது என்பது கடினம் எனக் கூறினார்கள். தான் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை இப்படிச் சீரழித்து விட்டானே எனக் கதறிய தந்தை, கோபத்தில் மகனை இருசக்கர வாகனங்கள் சீர் செய்யும் மெக்கானிக் கடையில் சேர்த்து விட்டுள்ளார்.
தொழில்நுட்பம் வளர வளரப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும். அவர்கள் கையில் ஸ்மார்ட் போனோ அல்லது கணினியோ இருந்தால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளைச் சரியாகக் கண்காணிக்காமல் விட்டால் என்ன ஒரு ஆபத்தில் முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.

மற்ற செய்திகள்
