பெத்த மகனுக்கே ஸ்கெட்ச்.. கரும்பு தோட்டத்தில் இருந்த 6 பேர்.. அப்பா செஞ்ச குலை நடுங்கும் காரியம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் மகனை கொலை செய்ததாக தந்தையை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இது அம்மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியை சேர்ந்தவர் அகில். தங்க நகை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 30 வயதான இவர் கடந்த 1 ஆம் தேதி மர்மமான முறையில் காணாமல்போனதாக அவருடைய உறவினர் ஒருவர் 3 ஆம் தேதி ஹூப்ளி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இதனையடுத்து இதுகுறித்து விசாரணையில் இறங்கிய போலீசார் அகிலை தேட துவங்கினர். அப்போது, அகிலின் தந்தை பாரத் மகாஜன்ஷேத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்திருக்கிறார்.
இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை தொடரவே, பாரத் மகாஜன்ஷேத் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்திருக்கிறார். இதனால் போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அகிலை கொலை செய்ய 6 பேர்கொண்ட கும்பலை தொடர்பு கொண்டதாகவும், கொலை செய்த பின்னர் அவருடைய உடலை கரும்பு தோட்டத்தில் புதைத்துவிட்டதாகவும் பாரத் மகாஜன்ஷேத் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து, களக்காட்டி அருகே உள்ள தேவிகொப்பிலுள்ள கரும்பு தோட்டத்தில் போலீசார் ஆய்வு நடத்தினர். அங்கே அகிலின் உடல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, கர்நாடகா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (கிம்ஸ்), தடய அறிவியல் பிரிவின் நிபுணர்கள் குழு, அந்த இடத்தில் பிரேதப் பரிசோதனை செய்தது. மேலும் ஹூப்ளியில் உள்ள பிராந்திய தடயவியல் ஆய்வகத்தின் நிபுணர்கள் கொலை வழக்கு தொடர்பாக முக்கிய தகவல்களைச் சேகரித்தனர். பின்னர் அகிலின் உடல் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து, அகிலின் தந்தை பாரத் மகாஜன்ஷேத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் குடும்பத்திற்குள் ஏற்பட்ட சிக்கல் காரணமாக மகனை கொலை செய்ய நினைத்ததாகவும், அதனால் 6 பேர்கொண்ட கும்பலை தொடர்புகொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார். சம்பவம் நடந்த அன்று அவரே கரும்பு தோட்டத்திற்கு அகிலை அழைத்துச் சென்று கும்பலிடம் ஒப்படைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றம் சாட்டப்பட்ட மற்ற 6 பேரும் ஹூப்ளியில் வசிக்கும் மகாதேவ் நல்வாட், சலீம் சலாவுதீன் மௌல்வி, ரெஹ்மான் விஜாபூர், பிரபய்யா ஹிரேமத் மற்றும் முகமது ஹனிப் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். பாரத் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மூன்று பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர் எனவும் மற்ற மூன்று பேர் வியாழக்கிழமை காலை ஹப்ளியில் உள்ள கப்பூர் அருகே கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தையே பரபரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | மாண்டஸ் புயல்.. இந்த ஏரியால மழை தட்டி வீசப்போகுது.. தமிழக வெதர்மேன் கொடுத்த எச்சரிக்கை..!