பாகிஸ்தானில் இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச்சூடு..? போலீசார் குவிப்பு.. முழுவிபரம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தானில் இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இரு அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 657 ரன்களும், பாகிஸ்தான் 579 ரன்களும் குவித்தன. அடுத்து 78 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் அதிரடி காட்டிய இங்கிலாந்து 35.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 264 ரன்களுடன் 'டிக்ளேர்' செய்தது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 343 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 96.3 ஓவர்களில் 268 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.
இந்நிலையில், இன்று முல்தானில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதனிடையே, இங்கிலாந்து அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஹோட்டலில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் இரு கும்பல்கள் இடையே மோதல் நடைபெற்றதாகவும் அதில் 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு சென்று விளையாட பல நாடுகள் மறுப்பு தெரிவித்து வந்தன. அதன்பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகளில் அந்நாட்டு அரசு கூடுதல் கவனம் செலுத்துவதாகவும், வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது. அதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸி அணிகள் பாகிஸ்தானில் சென்று விளையாடின. இந்நிலையில், இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி இருப்பது மீண்டும் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இருப்பினும், பலத்த போலீஸ் பாதுகாப்புகளுக்கு இடையே முல்தானில் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read | மாண்டஸ் புயல்.. இந்த ஏரியால மழை தட்டி வீசப்போகுது.. தமிழக வெதர்மேன் கொடுத்த எச்சரிக்கை..!