கொரோனா 'தனிமை'... 'அப்பா','அம்மா' அசந்த 'நேரம்' பாத்து... '11 மாத' குழந்தைக்கு நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த சாலச்சேரி பகுதியை சேர்ந்த தம்பதியர் முஹம்மது ஷாபிக் - லியானா. இவர்களுக்கு 11 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
முஹம்மது ஷாபிக் உறவினர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஷாபிக் மற்றும் லியானா ஆகியோரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், அவரது 11 மாத ஆண் குழந்தை தனியாக விளையாடியுள்ளது. சிறிது நேரம் தனியாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென மாயமானதை தொடர்ந்து பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
குழந்தையை இருவரும் தேடிய போது, அங்கிருந்த தண்ணீர் வாளி ஒன்றில் குழந்தை மிதப்பதை கண்டு அதிர்ந்து போன பெற்றோர்கள், உடனடியாக குழந்தையை தூக்கிக் கொண்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், நீரில் மூழ்கி குழந்தை இறந்து போனதை உறுதி செய்தனர்.
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்ற தகவலறிந்து வந்த கேரளா சுகாதாரத்துறையினர், உடனடியாக அடக்கம் செய்ய வேண்டி குழந்தையை கொண்டு சென்றனர். பின்னர் குழந்தையை தொட்டு தூக்கிய மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரை உடனடியாக தனிமைப்படுத்தி அந்த தனியார் மருத்துவமனையையும் சீல் வைத்தனர்.
கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்களது குழந்தைகளை கண்ணெதிரில் விளையாட அனுமதிக்க வேண்டும். அதே போல குழந்தைகள் விளையாடும் வகையில் தண்ணீர் வாளி மற்றும் தொட்டி இருப்பதை தவிர்க்க வேண்டும் என காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.