"அந்தப் புள்ள நல்ல படியா தேர்வு எழுதினா போதும்!".. ஒற்றை பள்ளி மாணவிக்காக... ஒட்டு மொத்த அரசும் உதவிய நெகிழ்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் ஒற்றை பள்ளி மாணவி தேர்வு எழுவதற்காக 70 பேர் இருக்கை கொண்ட படகு இயக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆழப்புழாவைச் சேர்ந்த பள்ளி மாணவி, சான்ரா பாபு. இவர் கோட்டயத்தில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இவரது பெற்றோர் தினக்கூலிகளாக வேலை செய்கின்றனர்.
ஊரடங்கு காரணமாக அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பள்ளி இறுதியாண்டுத் தேர்வு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரிய பொருளாதார பின்னணி எதுவும் இல்லாத காரணத்தால், தங்களுடைய மகளால் தேர்வினை எழுத முடியாது என்று சான்ராவின் பெற்றோர் வருந்தியுள்ளனர்.
இந்நிலையில், கேரள மாநிலத்தின் நீர்வழிப் போக்குவரத்து துறையை அணுகிய மாணவி சான்ரா, தன்னுடைய நிலைமையை அதிகாரிகளிடம் விளக்கியுள்ளார். மாணவியின் கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள் அவருக்காக படகுப் போக்குவரத்தை ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தனர்.
அதைத் தொடர்ந்து, மே மாதம் 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில், 70 பேர் இருக்கை கொண்ட படகு ஒரே ஒரு பயணியான மாணவி சான்ராவிற்காக இயக்கப்பட்டது. மேலும், சரியான நேரத்தில் மாணவியை பள்ளியில் கொண்டு சேர்த்தோடு, தேர்வு முடியும் வரை அவருக்காக காத்திருந்து மீண்டும் அவரை வீட்டுக்கு கொண்டு பத்திரமாக சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய போக்குவரத்து அதிகாரி ஒருவர், 'ஒரு ட்ரிப்க்கு 4000 ரூபாய் செலவாகும். எனினும், மாணவியிடம் நாள் ஒன்றுக்கு 18 ரூபாய் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது' என்றார்.
மேலும், மாணவி சான்ரா பேசுகையில், "எனக்கு நீர்வழிப் போக்குவரத்து துறையை நினைத்தால் பெருமையாக உள்ளது, என்னுடைய மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை" என்று நெகிழ்ந்துள்ளார்.
இச்சம்பவத்தை பல தரப்பு மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
