'ஊரடங்கு' உத்தரவை நீட்டித்து 'தமிழக முதல்வர்' உத்தரவு ... எதற்கெல்லாம் அனுமதி?... விரிவான 'விளக்கம்' உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் அறிவித்து இருக்கிறார்.

,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வருகின்ற ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் அமல்படுத்துவதாக பிரதமர் மோடி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். இந்தியா முழுவதும் இந்த ஊரடங்கு உத்தரவு தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், அனைத்து மாநில, முதல்வர்களும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்தனர். ஊரடங்கு குறித்து நாளை காலை 10 மணியளவில் பிரதமர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊரடங்கை வருகின்ற ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டித்து இருப்பதாக அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
*பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு, மே மாதத்திற்கான 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும்.
*பேக்கரிகள் காலை 6 மணி முதல் 1 மணி வரை இயங்குவதற்கு தடையில்லை. அனைத்து பேக்கரிகளிலும் பார்சல் விற்பனை மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
*விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விவசாய விளை பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்ல எந்தவித பாஸ் மற்றும் அனுமதியும் தேவையில்லை. தடையில்லாமல் விளைபொருட்களை எடுத்துச் செல்லலாம்.
*தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், (சர்க்கரை, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை தலா 1 கி.கி, எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி 15 கிலோ ) நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும்.
*கட்டடத் தொழிலாளர்கள் உட்பட பதிவு பெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கும், குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக ரூ.1,000 நிவாரண உதவி வழங்கப்படும்.
*சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள மக்கள் கொரோனா நோய் தொடர்பான தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள டெலி மெடிசின் சொஸைட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் பதிவு பெற்ற சிறந்த மருத்துவர்களை கொண்டு, தொலை மருத்துவ துறை மூலம் தங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு தெளிவு பெற தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது.
*கொரோனா நோய்த்தொற்றினை தடுக்கும் நோக்கில் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் படியும் குற்றவியல் சட்டப்பிரிவு 144-ன் படியும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அனைத்து கட்டுப்பாடுகளும் தொடரும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.
