"விஷமிகள் சிலர் கொடுத்ததை.. நம்பி உண்ட யானை.. வெடித்துச் சிதறிய அன்னாசிப்பழம்".. "அவளின் சிசுவைக் கையில் ஏந்தும்போது" நொறுங்கிப் போன பிரேத பரிசோதனை மருத்துவர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளா மாநிலம் மலப்புரத்தில் நடந்த கொடூர சம்பவம், நடந்து சில நாட்கள் ஆகியிருந்தாலும் கேரள வனத்துறை அதிகாரியின் சமூக வலைதளம் மூலம் வைரலாகி விலங்கின ஆர்வலர்களின் மனசாட்சியை உலுக்கி கொண்டிருக்கிறது.

கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானை ஒன்றைப் பார்த்த அந்த கிராமவாசிகள் யாரோ அதற்கு அன்னாசிப்பழத்தை கொடுக்க, அதை நம்பிக்கையுடன் வாங்கி யானை சாப்பிட முயன்றுள்ளது. ஆனால் அந்த பழத்தினுள் சில விஷமிகள் வெடியையும் சேர்த்து வைத்துள்ளதை அந்த யானை அறிந்த பாடில்லை. அந்த பழத்தை யானை கடித்தபோது அன்னாசிப்பழம் வெடித்து சிதறியது. இதில் யானையின் வாய், நாக்கு படுகாயமடைந்து அந்த காயத்துடனும், கடும் வேதனையுடனும் அந்த கிராமத்தில் சுற்றி திரிந்துள்ளது. அப்போதும் கூட யாரையும் அந்த யானை தாக்கவில்லை. அங்கிருந்த எந்த ஒரு வீட்டையும் சேதப்படுத்தவும் இல்லை.
பின்னர் மலப்புரம் வெள்ளி ஆற்றில் இறங்கி அங்கேயே நின்று கொண்டது. தண்ணீர் தனது வேதனையை தணிக்கும் என நம்பியதோ என்னவோ? ஒருவேளை ஈக்கள் பூச்சிகள் புண்ணில் மொய்ப்பதை தவிர்ப்பதற்கு அப்படி நின்றதோ என்னவோ? யாருக்கும் தெரியவில்லை. இதையடுத்து கும்கி யானைகளை அழைத்துக்கொண்டு அந்த யானையை ஆற்றில் இருந்து மீட்க முயற்சித்துள்ளனர் சிலர். ஆனால் அதற்கும் அனுமதிக்காத அந்த யானை மே 27 மாலை 4 மணிக்கு இறந்துபோனது.
வெடி வெடித்த போது நிச்சயமாக அதன் வயிற்றில் இருந்த குட்டியை நினைத்து அந்த யானை கலங்கி இருக்கும் என்று கூறுகிறார்கள் அந்த சிலர். பின்னர் ஒரு வாகனத்தில் யானையை ஏற்றி அதனை காட்டுக்குள் கொண்டு சென்று இறுதி மரியாதையை உரிய இடத்தில் வனத்துறையினர் அளித்துள்ளனர்.
யானையை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர், “நான் இதுவரை 250 யானைகளுக்கு மேல் பிரேத பரிசோதனை செய்திருக்கிறேன். ஆனால் இதை இன்னொரு பிரேத பரிசோதனையாகக் கடந்து செல்ல மனமில்லை. மிகவும் உணர்ச்சிவசப் படுகிறேன் கருப்பையில் இருந்த யானையின் சிசுவினை கையில் ஏந்தினேன். பிரேதப் பரிசோதனை தொடங்குமுன் அவள் கருவுற்றிருப்பாள் என நான் நினைக்கவில்லை. ஆனால் கருப்பையில் சிறிய இதயமும், அட்நியோமிக் அமிலமும் இருந்ததை வைத்துதான் யானை கர்ப்பமாக இருப்பதை அறிந்தேன்" என்று கூறியுள்ளார். மேலும், “அன்னாசிப்பழத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் யானையின் உடலில் சென்று வெடித்ததால், அதன் நுரையீரல் பாதிக்கப்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது” என அம்மருத்துவர் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இதுபற்றி கேள்விப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, “மிருகங்களை அன்பாலும் மனிதநேயத்துடனும் ஆளுங்கள்” என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
