'இனி நோ ஸ்கூல் பேக்'... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Jun 04, 2019 10:34 AM
சனிக்கிழமைகளில், மாணவர்கள் ஸ்கூல் பையை கொண்டு வரத் தேவையில்லை என்று ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்ட அறிவிப்பால் மாணவர்கள் குஷியடைந்துள்ளனர்.
ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. தன் தந்தை இறந்து 10 வருடங்களுக்குப் பிறகு இவர் முதல்வராகியுள்ளதால், மக்களுக்கு இவர் ஆட்சி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தற்போது மாணவர்களுக்காக இவர் அறிவித்துள்ள திட்டம் ஆந்திரா முழுவதும் நல்ல வரவேற்புப் பெற்றுள்ளது. சமீபத்தில், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார். அதில், 'இனி வரும் சனிக்கிழமைகளில், மாணவர்கள் புத்தகப் பையுடன் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை என்றும், சனிக்கிழமைகளில் படிப்பு அல்லாத பிற திறன்கள் மற்றும் விளையாட்டுக்காக மட்டுமே மாணவர்கள் செலவழிக்க வேண்டும்' என்றும் அறிவித்துள்ளார்.
'மாணவர்களுக்கு நிலையான கல்வி வழங்க வேண்டும் என எங்கள் அரசு முடிவுசெய்துள்ளது. சில தனியார் பள்ளிகள், மாணவர்களை மதிப்பெண்கள் பின்னால் மட்டுமே ஓட வைக்கின்றன. தெரிந்தோ, தெரியாமலோ பல பெற்றோர்களும் இதற்கு ஆதரவு அளிக்கின்றனர். ஆனால் அதை உடைத்து, மாணவர்கள் விளையாட்டு போன்ற பிற திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது' என விஜயவாடா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்களின் புத்தகப் பையின் எடையைக் குறைப்பதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனவும் ஜெகன் கூறியுள்ளார். ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த அறிவிப்பு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.