2 'பல்பு' எரிஞ்சதும், கொஞ்ச நேரம் 'டிவி' பாத்ததும் குத்தமா?... 'கரண்ட்' பில் பாத்து ஒரு நிமிஷம் 'தலையே' சுத்திருச்சு!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் ராஜக்கோடு பகுதியில் சிறிய வீடு ஒன்றில் வசிப்பவர் ராஜாம்மா. ஏலக்காய் தோட்டத்தில் பணிபுரிந்து வரும் இவரது வீட்டில் இரண்டு மின் விளக்குகள் மற்றும் டிவி மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
வழக்கமாக அனைத்து மாதங்களிலும் சுமார் 200 முதல் 300 ரூபாய் வரை ராஜாம்மா மின் கட்டணம் செலுத்தி வந்த நிலையில் தற்போது வந்த மின் கட்டணத்தை கண்ட அவர் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார். வழக்கமான கட்டணத்தில் சுமார் 40 மடங்கு அதிகரித்து அதாவது, 11,359 ரூபாய் மின் கட்டணமாக வந்துள்ளது. அந்த பில்லில், ரூபாய் 5601 மட்டும் டோர் லாக் அட்ஜஸ்ட்மென்ட் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. டோர் லாக் அட்ஜஸ்ட்மென்ட் கடந்த நான்கு மாத பயன்பாட்டில் பாதியளவு கணக்கிடப்படுவதாக கேரளா மின்வாரியம் தெரிவித்திருந்தது.
இந்த மின்கட்டணம் குறித்து விளக்கம் தெரிவித்த கேரள மின்வாரியம், 'மின் இணைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் ஏற்பட்ட மின் இழப்பால் தான் மின் பயன்பாட்டுக் கட்டணம் அதிகமாகியுள்ளது. அந்த பகுதியிலுள்ள மேலும் சில வீடுகளிலும் இது போன்ற புகார்கள் எழுந்துள்ளது. அனைத்து புகார்களையும் விசாரித்து வருகிறோம். மீட்டர் பாக்சில் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் ரீடிங் அட்ஜஸ்ட்மென்ட் மூலம் தான் இந்த தவறு நிகழ்ந்துள்ளது. அடுத்தடுத்து மாதங்களில் வரும் மின் கட்டங்களில் அதிகப்படியான மின் பயன்பாட்டுத் தொகை சரி செய்யப்படும்' என கேரள மின்வாரியம் விளக்கமளித்துள்ளது.