உலகமே ‘லாக் டவுனில்’... ஆனால் ‘மார்ச் 25’ முதல்... ‘சீனா’ வெளியிட்டுள்ள ‘அதிரடி’ அறிவிப்பு...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள் மார்ச் 25 முதல் நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாணத்திலுள்ள வுஹான் நகரில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதையடுத்து வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், அந்த நகரத்திற்கு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு பொதுமக்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். அதன்பிறகு அங்கிருந்து பல்வேறு உலக நாடுகளுக்கும் கொரோனா பரவியது. தற்போது உலகம் முழுவதும் கொரோனாவால் 14,652 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3,34,981 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பெரும்பாலான நாடுகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே சீனாவில் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளால் கடந்த 19ஆம் தேதியில் இருந்து அங்கு புதிய உள்நாட்டுத் தொற்று எதுவும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள் இன்று (செவ்வாய்) நள்ளிரவில் இருந்து தளர்த்தப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் வுஹான் நகரத்தில் மட்டும் ஏப்ரல் 8 வரை பயணக் கட்டுப்பாடுகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதியில் இருந்து 2 மாதங்களாக அங்கு இந்தக் கட்டுப்பாடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
