'கொரோனா வைரஸ் வருது, கொஞ்சம் தள்ளி நில்லுப்பா...' 'வெங்காயம் நறுக்கிட்டு வைத்திருந்த கத்தியை எடுத்து...' கொரோனா வைரஸ் வைத்து கிண்டலாக பேசியதால் வெறிச்செயல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் வைத்து கிண்டல் செய்ததால் டீ கடையில் இருந்த கத்தியை வைத்து கொலை செய்த சம்பவம் ஊட்டி மாநகரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் இன்று மாலை 6 மணியிலிருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கொரோனோவை காரணம் காட்டி நடந்த நிகழ்வில் கொலை சம்பவம் ஏற்பட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஊட்டி மாவட்டம், B1 காவல் நிலையம் செல்லும் வழியில் இருந்த ஒரு டீக்கடையில் கூலி தொழிலாளியான ஜோதிமணி மற்றும் அவரின் நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து பகல் 12 மணியளவில் மீன் வறுவலை சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது அருகில் இருக்கும் பேக்கரியில் வேலை செய்யும் தேவதாஸ் அதே தேநீர் கடைக்கு வந்துள்ளார்.
அங்கிருந்த ஜோதி மணி, தேவதாஸை பார்த்து `கொரோனா வைரஸ் வருதுப்பா... கொஞ்சம் தள்ளி நில்' எனக் கிண்டல் அடித்துள்ளார். ஏற்கனவே கொரோனா வைரஸ் அச்சத்தில் இருக்கும் மனநிலையில் இருந்த தேவதாஸ் ஆத்திரமடைந்து தேநீர் கடையில் காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து ஜோதிமணியின் கழுத்தில் குத்தியுள்ளார்.
ஜோதிமணி உடன் இருந்த நண்பர்கள் கண் முன்னே நொடிப்பொழுதில் கொலை செய்யப்பட்டதால் ஊட்டி மார்க்கெட்டில் பாரம் தூக்கும் தொழிலாளர்கள் ஆவேசமடைந்து தேவதாஸைத் தாக்க முற்பட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடனே ஜோதிமணி உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேவதாஸை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
``மீன் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஜோதிமணிக்கு வெங்காயத்தை வெட்டிக் கொடுத்துவிட்டு கத்தியை மேஜை மீது வைத்தார். கொரோனா குறித்து தேவதாஸை ஜோதிமணி கிண்டலாகப் பேசவும் ஆத்திரத்தில் கத்தியை எடுத்துக் குத்திவிட்டார்" என சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர்.