‘2000 ரூபாய் நோட்டு வாபஸ்?’.. ‘மீண்டும் அறிமுகமாகும் 1000 ரூபாய் நோட்டு?’.. சர்ச்சைகளுக்கு ‘பதிலளித்துள்ள’ மத்திய அமைச்சர்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Dec 10, 2019 06:38 PM

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்படுகிறதா என்ற கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

Minister Explains About Reports Of Govt Withdrawing Rs 2000 Note

சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. விஷம்பர் பிரசாத் நிஷாத் இன்று மக்களவையில் பேசும்போது, “2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கருப்புப்பண புழக்கம் அதிகரித்துள்ளது. அதனால் மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டை விரைவில் திரும்பப் பெற்று, மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் பரவியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும்” எனக் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், “பணமதிப்பிழப்பு குறித்து மக்களிடையே இன்னும் அச்சம் இருக்கிறது. ஆனால் யாரும் கவலைப்படத் தேவையில்லை. 2000 ரூபாய் நோட்டை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை. அதேசமயம் சந்தையில் இருந்து பெறப்பட்ட 1000 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமும் இல்லை.

ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரப்படி 2016-17ஆம் ஆண்டில் 7,62,072 எண்ணிக்கையிலான கள்ள நோட்டுகளும், 2017-18ஆம் ஆண்டில் 5,22,783 கள்ள நோட்டுகளும், 2018-19ஆம் ஆண்டில் 3,17,389 கள்ள நோட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பணமதிப்பு நீக்கம் நடவடிக்கையின் மூலம் கள்ள நோட்டுகள் புழக்கம் தடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Tags : #MONEY #ANURAG THAKUR #MINISTER