“புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பேருந்து ஏற்றி சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும்!” - நிபந்தனைகளுடன் மத்திய அரசு உத்தரவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Apr 30, 2020 10:48 AM

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுவதாகவும், அவர்களை பேருந்துகளில் ஏற்றி அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிடுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து நிறுத்தம் இருப்பதால் பல்வேறு மாநிலங்களிலும் புலம் பெயர்ந்த தொழிலாலர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் தவிப்பதோடு, பிற மாநிலங்களுக்கு படிக்கச் சென்ற மாணவர்களும் சுற்றுலாவுக்கு சென்றவர்களும் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல், அங்கேயே இருக்கின்றனர்.

MHA allows movement of migrant workers, tourists, students

தமிழ்நாட்டை பொருத்தவரை சென்னை உள்ளிட்ட ஊர்களில் கட்டிட பணிகளை செய்ய வெளிமாநிலத்தில் இருந்து வந்த தொழிலாளர்கள், சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம் போன்ற மாநிலங்களிலும் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் இருப்பதாகவும், கட்டுப்பாடுகளை மீறி சொந்த மாநிலத்திற்கு செல்ல முயற்சிக்கும் தொழிலாளர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப் படுவதாகவும் தெரிகிறது. இதனால் மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் உணவின்றி தவிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

இந்த நிலையில் மாநில யூனியன் பிரதேச அரசுகள் தனி அதிகாரிகளை நியமித்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென்றும், வெளிமாநில தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்து அவர்களில் யாரெல்லாம் சொந்த ஊர் செல்ல விரும்புகிறார்கள் என்பதை கேட்டு அறிந்து அவர்களில் கொரோனா தொற்று இல்லாதவர்களை மட்டும் பேருந்துகளில் ஏற்றி சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக பேருந்துகளில் பயணம் செய்யும் தொழிலாளர் முகக் கவசம் அணிந்து குறிப்பிட்ட இடைவெளியில் அமர்ந்து செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும், பேருந்துகளில் கிருமிநாசினி தெளிக்கவேண்டும் என்றும், அந்தப் பேருந்துகள் பல்வேறு மாநிலங்கள் வழியாக கடந்து செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும்,

சொந்த ஊர்களை அடைந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா தொற்று இருப்பவர்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.