6 வருஷத்துக்கு முன்னாடி தொலைந்துபோன மாற்றுத் திறனாளி சிறுவன்.. ஆதார் கார்டு மூலமாக நடந்த அதிசயம்.. நெகிழ வைக்கும் சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபீஹார் மாநிலத்தில் 6 வருடங்களுக்கு முன்னதாக காணாமல்போன சிறுவன் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு ஆதார் கார்டு உதவியிருக்கிறது. இதனால் அவருடைய பெற்றோர் பெரிதும் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.

Also Read | இது புதுசால்ல இருக்கு.. விநாயகருக்கு ஆதார் கார்டு வடிவில் சிலை.. பிறந்த தேதிலாம் இருக்கா..?
காணாமல்போன மகன்
பீஹார் மாநிலம் ககாரியா மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறுவன் (பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உடையவர்) கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காணாமல் போயிருக்கிறார். அப்போது அவருடைய வயது 15 ஆகும். அவர் அதே ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதியன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ரயில்வே நிலையத்தில் அதிகாரிகளால் கண்டறியப்பட்டிருக்கிறார். மாற்றுத் திறனாளியான அவரை உள்ளூரில் இருக்கும் காப்பகம் ஒன்றில் ரயில்வே அதிகாரிகள் சேர்த்திருக்கின்றனர்.
ஆதார் கார்டு
மேலும், அவருக்கு பிரேம் ரமேஷ் இங்காலே என பெயரிடப்பட்டிருக்கிறது. இதையடுத்து சிறுவனின் அடையாளங்களை ஆதாரில் பதிவு செய்ய முடிவெடுத்திருக்கின்றனர் காப்பக அதிகாரிகள். இதைத் தொடர்ந்து, காப்பக கண்காணிப்பாளர் வினோத் தேப்ராவ் சிறுவனுக்கு ஆதார் எடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அவருடைய கைரேகை வேறு ஆதார் எண்ணுடன் பொருந்தி இருந்ததால் புது ஆதார் கார்டு எடுக்க முடியவில்லை. இதனால் குழப்பமடைந்த அவர் மும்பையில் உள்ள UIDAI மண்டல அலுவலகத்திற்கு சென்று இதுகுறித்து விசாரித்திருக்கிறார்.
ஆச்சர்யம்
அப்போது அதிகாரிகள் கூறிய தகவல் வினோத்தை ஆச்சர்யத்தில் ஆழத்தியிருக்கிறது. அதாவது பீகாரின் ககாரியா மாவட்டத்தில் சச்சின் குமார் என்ற பெயருடன் 2016 இல் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அதில் உள்ள கைரேகை இந்த சிறுவனுடையது தான் என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து பீகாரில் உள்ள காணாமல்போன நபரின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைக்கேட்டு மகிழ்ந்துபோன இளைஞரின் பெற்றோர் தங்களது உறவினர்களுடன் நாக்பூர் வந்திருக்கிறார்கள்.
உரிய ஆவணங்களை அவர்கள் சமர்ப்பித்த நிலையில், இளைஞரை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்திருக்கிறார்கள் காப்பக அதிகாரிகள். சிறுவனாக இருந்தபோது காணாமல்போன தங்களது மகன் இளைஞராக திரும்பி வந்திருப்பதை கண்டு அவரது பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் விட்டிருக்கின்றனர். இதனைக்கண்ட அதிகாரிகளும் நெகிழ்ந்து போயிருக்கிறார்கள்.
Also Read | அதிமுக பொதுக்குழு வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!

மற்ற செய்திகள்
