"உங்க கணவர் என்ன செய்யுறாருன்னு சீக்கிரம் போய் பாருங்க".. காலையில் மனைவிக்கு வந்த போன்கால்.. கொஞ்ச நேரத்துல கேட்ட அலறல் சத்தம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹரியானா மாநிலத்தில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
பெரும் சோகம்
ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்தவர் அமித் குமார். 40 வயதான அமித் சில மாதங்களுக்கு முன்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்திருக்கிறார். திருமணமான அமித் குருகிராமில் உள்ள ரவி நகர் காலனியில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், புதன்கிழமை காலை அமித் தனது வீட்டில் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். இதனையடுத்து, காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கிய குருகிராம் காவல்துறையினர் பல திடுக்கிடும் தகவல்களை கண்டறிந்திருக்கின்றனர். அமித் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது சக பணியாளர்களுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், பணியாளர் ஒருவருடன் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தான் விரக்தி அடைந்திருப்பதாகவும், தனது உயிரை மாய்த்துக்கொள்ள இருப்பதாகவும் அமித் குறிப்பிட்டிருந்ததாக தெரிகிறது.
போன்கால்
இதனை தொடர்ந்து இந்த மெசேஜை பார்த்த அமித் உடன் பணியாற்றும் ஒருவர், புதன்கிழமை காலை அமித்தின் மனைவிக்கு போன் செய்திருக்கிறார். படபடப்புடன் பேசிய அவர் தனக்கு அமித் அனுப்பிய மெசேஜ் குறித்து கூறியதுடன், அவர் என்ன செய்கிறார் என்று பார்க்கும்படியும் சொல்லியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்மணி மாடியில் இருந்த அறைக்கு சென்று பார்த்தபோது அமித் தனது உயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்திருக்கிறது. இதனால் துடித்துப்போன மனைவி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றிருக்கிறார். ஆனால், அவர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இதனையடுத்து, இதுகுறித்து காவல்துறையில் அமித்தின் மனைவி புகார் அளித்திருக்கிறார். மேலும், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என காவல்துறையினரிடத்தில் கோரிக்கையும் வைத்திருக்கிறார். இந்நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அமித் பணிபுரிந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீர்வல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.