6 பேர் உயிரைக் காப்பாற்றிய 'ALEXA'.. நள்ளிரவில் கொடுத்த எச்சரிக்கை.. அப்படி என்ன செஞ்சுது?
முகப்பு > செய்திகள் > உலகம்ஆறு பேர் கொண்ட குடும்பம் ஒன்று அமேசானின் அலெக்ஸா மூலம் உயிர் தப்பியது தொடர்பான செய்தி தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.
அமெரிக்காவின் மேரிலேண்ட் என்னும் பகுதியில் குடும்பம் ஒன்று வசித்து வருகிறது. இந்த குடும்பத்தில் நான்கு பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் என மொத்தம் ஆறு பேர் வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. நள்ளிரவில் இவர்கள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் திடீரென சுமார் இரவு 2 மணியளவில் வீடு முழுவதும் தீ பிடிக்க ஆரம்பித்துள்ளது. மிகவும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இதை கவனிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. வீட்டில் வேகமாக தீ சூழ்ந்து கொண்டு எரிய ஆரம்பித்த நிலையில், வீடு முழுவதும் புகை மூட்டமும் ஏற்பட்டுள்ளது.
இந்த புகைமூட்டம் வீடு முழுவதும் பரவத் தொடங்கிய சமயத்தில், அவர்களின் வீட்டில் இருந்த அமேசானின் குரல் சேவையான அலெக்ஸா இதனை உணர்ந்துள்ளது. இதனால் உடனடியாக ஒலி எழுப்பி, வீட்டிலிருந்த அனைவருக்கும் கேட்கும் விதத்தில் சத்தமாக எச்சரிக்கை விடுக்கவும் தொடங்கியுள்ளது. அலெக்ஸாவின் எச்சரிக்கை சத்தத்தை கேட்டதும் தூக்கத்தில் இருந்து திடீரென விழித்துக் கொண்ட குடும்பத்தினர், வீடு முழுவதும் சூழ்ந்திருந்த புகை மண்டலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் வீட்டை முற்றிலுமாக தீ சூழ்ந்து கொண்டதால், அங்குள்ள கேரேஜ் வழியாக குடும்பத்தினர் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். ஒருவேளை எச்சரிக்கை கொடுக்க தாமதம் ஏற்பட்டிருந்தால் கூட மூச்சுத் திணறல் ஏற்பட்டு வீட்டில் உள்ளவர்களுக்கு பாதிப்பு உருவாகி அவர்கள் அங்கிருந்து வெளியேறுவது கூட சிரமமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் ட்விட்டரில் அலெக்ஸா மூலம் காப்பாற்றப்பட்ட குடும்பம் குறித்து தகவலை பகிர்ந்துள்ளனர். ஆறு பேர் உயிரை அலெக்ஸா காப்பாற்றிய நிலையிலும் அவர்கள் வசித்திருந்த வீடு மொத்தமாக தீக்கரை ஆகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. சுமார் 1,75,000 அமெரிக்க டாலர்கள் வரை வீடு சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆழ்ந்த நித்திரையில் இருந்த குடும்பத்தினர் அனைவரையும் எச்சரிக்கை கொடுத்து அவர்கள் உயிரை காப்பாற்ற செய்த குரல் கருவி ஆன அலெக்ஸா குறித்து இணையத்தில் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.