"என்னய்யா முட்டை இப்டி ஒரு SHAPE'ல இருக்கு.." கோழி இட்ட வினோத முட்டை.. வியப்பில் ஆழ்ந்த கிராம மக்கள்
முகப்பு > செய்திகள் > இந்தியாநாளுக்கு நாள் நம்மைச் சுற்றி ஏராளமான விஷயங்கள் நிகழ்ந்து, அவற்றின் வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள், இணையத்தில் அதிகம் வைரலாகும்.
அப்படி அரங்கேறும் விஷயங்கள், அதிர்ச்சியாகவோ, வினோதமாகவோ அல்லது நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் விஷயங்களாக கூட இருக்கலாம்.
அந்த வகையில், இயற்கைக்கு மாறாக கர்நாடக பகுதியில் நிகழ்ந்த விந்தையான விஷயம் ஒன்று, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
கோழி இட்ட முட்டை
கர்நாடக மாநிலம், பெல்தங்கடி தாலுகா அருகே அமைந்துள்ளது லைலா என்னும் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கு சொந்தமாக கோழி ஒன்று உள்ளது. மேலும், இந்த கோழியானது, சமீபத்தில் முட்டை ஒன்றை இட்டுள்ளது. பொதுவாக கோழியின் முட்டை என்றாலே அது ஓவல் வடிவத்தில் தான் இருக்கும். ஆனால் இந்த கோழி போட்ட முட்டை, முந்திரி வடிவில் இருந்துள்ளது. இதனைக் கண்ட பிரசாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர், சற்று ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
படையெடுத்த கிராம மக்கள்
இதன் பின்னர், இரண்டு மூன்று நாட்கள் வரை காத்திருந்து மற்ற முட்டைகள் எப்படி இருக்கிறது என்றும் பிரசாந்தின் குடும்பத்தினர் சோதித்துப் பார்த்துள்ளனர். இந்நிலையில் தான், அந்த கோழி தொடர்ந்து மூன்று நாளாக போட்ட முட்டைகள் அனைத்துமே முந்திரி வடிவில் இருந்துள்ளது. இதனை அறிந்த பிரசாந்த் ஆச்சரியமும், வியப்பும் அடைந்தும் போனார். முந்திரி வடிவில் கோழி முட்டை போட்டது தொடர்பான செய்தி, அந்த கிராமம் முழுவதும் தீயாக பரவியுள்ளது. பலரும் பிரசாந்த் வீட்டிற்கு வந்து முந்திரி வடிவில் இருக்கும் முட்டையை, ஆச்சரியத்துடன் பார்த்து விட்டுச் சென்றனர்.
காரணம் என்ன?
அதே போல, இந்த கோழியும் கிராம மக்கள் மத்தியில் அதிக அளவில் பிரபலமானது. இது தொடர்பாக கோழியின் உரிமையாளர் பிரசாந்த் பேசுகையில், "அசாதாரண வடிவில் கோழி முட்டை போட்டதால், எங்களின் கோழியை கால்நடை மருத்துவரிடம் எடுத்துச் சென்றோம். அப்போது அதனை பரிசோதித்த மருத்துவர், அதன் இனப் பெருக்க உறுப்புகளில் புழுக்கள் இருக்கலாம் என்றும் தெரிவித்தார்" என பிரசாந்த் கூறியுள்ளார்.
முந்திரி வடிவில் கோழி போட்ட முட்டை தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. அதே போல, கடந்த மார்ச் மாதம், ஆந்திர பிரதேச மாநிலத்தில் கோழி ஒன்று மாம்பழ வடிவில் போட்ட முட்டையின் புகைப்படங்களும் அதிகளவில் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.