மைக்ரோ சிப் உடன் வரும் இந்தியாவின் புதிய பாஸ்போர்ட்: இன்னும் என்னவெல்லாம் சிறப்பம்சம்ங்கள் இருக்கு?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நாட்டில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் இ-பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்து உள்ளது. அதாவது இந்தப் புதிய இ-பாஸ்போர்ட்டில் முதல் முறையாக மைக்ரோசிப் வசதியுடன் கூடிய பல சிறப்பம்சங்கள் இடம் பெற உள்ளதாம்.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக்கத்தின் செய்தித் தொடர்பாளர், அரிந்தம் பாக்சி கூறுகையில், ‘பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை மேலும் மேம்படுத்தித் தருவது எங்கள் அமைச்சகத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். அதன் ஒரு தொடர்ச்சியாக அடுத்த தலைமுறைக்கான இ- பாஸ்போர்ட்டுகளை இந்திய அரசு தனது குடிமக்களுக்கு வழங்க உள்ளது’ என்று தெரிவித்து உள்ளார்.
இந்தப் புதிய இ-பாஸ்போர்ட்டுகள் மூலம் பயோமெட்ரிக் தரவுகள் கொண்டு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குச் செல்வது எளிமையாக்கப்படும். இப்படி பயோமெட்ரிக் முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் மோசடிகளைத் தவிர்க்க முடியும் என்று அரசுத் தரப்பு உறுதிபட கூறுகிறது.
இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்ல விரும்பும் குடிமக்களுக்குத் தற்போது மத்திய அரசு, புக்லெட் பாஸ்போர்ட்டுகளைத் தான் வழங்கி வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் இந்திய அரசு, தன் குடிமக்களுக்கு 12.8 மில்லியன் பாஸ்போர்ட்டுகளைக் கொடுத்துள்ளது. இந்த பாஸ்போர்ட்டுகள் மூலம் அதிக மோசடி நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்தப் பிரச்சனையை சமாளிக்கும் நோக்கிலேயே இ-பாஸ்போர்ட்டுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே இ-பாஸ்போர்ட் குறித்தான தொடர் சோதனைகளை இந்திய அரசு செய்து வருகிறது. அதன் முதல் கட்டமாக அரசு அதிகாரிகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக இ-பாஸ்போர்ட்டுகளை வழங்கி வருகிறது இந்திய அரசு. இதுவரை 20,000 இ-பாஸ்போர்ட்டுகள் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.