‘இனி இது தேவையில்லை’!.. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒரு ‘தித்திப்பான’ செய்தி.. OCI பாஸ்போர்ட்டில் புதிய விதிமுறை வெளியீடு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாவெளிநாடு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட்டில் புதிய விதிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினருக்கான OCI (Overseas Citizens of India) பாஸ்போர்ட் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. உலகமெங்கும் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு OCI எனப்படும், ‘வெளிநாட்டில் குடியிருக்கும் இந்தியர்கள்’ என்ற பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இது இந்திய குடிமகனுக்கு உள்ள பெரும்பாலான உரிமைகளை வழங்குகிறது.
OCI பாஸ்போர்ட் வைத்துள்ள வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள், வாழ்நாள் முழுதும், விசா இல்லாமல் எத்தனை முறை வேண்டுமாலும் இந்தியா வந்து செல்லலாம். ஆனால் அவர்களுக்கு இந்திய குடிமகனுக்கு உள்ளது போல் ஓட்டுரிமை கிடையாது. அரசு வேலையில் சேரவோ, விவசாய நிலம் வாங்கவோ முடியாது. அவர்களில் 20 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டோர், ஒவ்வொரு முறை பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும் போது, கூடவே OCI பாஸ்போர்ட்டையும் புதுப்பிக்க வேண்டும்.
OCI பாஸ்போர்ட் வைத்துள்ளோர், ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும், காலாவதியான பழைய வெளிநாட்டு பாஸ்போர்ட் உடன் புதிய பாஸ்போர்ட்டும் எடுத்து வர வேண்டும். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக வெளிநாட்டு பயணிகள், இந்தியா வர தடை விதிக்கப்பட்டது. இதனால் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்களின் OCI பாஸ்போர்ட்டை புதுப்பிப்பு காலம் பலமுறை நீட்டிக்கப்பட்டது.
அப்படி இருந்த போதிலும், OCI பாஸ்போர்ட் வைத்திருந்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள் பலர், தாயகம் திரும்ப விமான நிலையம் வந்தபோது, அவர்களிடம் காலாவதியான பழைய வெளிநாட்டு பாஸ்போர்ட் இல்லாத காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த விவகாரம் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபோது, குறிப்பிட்ட சில வகை OCI பாஸ்போர்ட் பிரிவினர் மட்டும், இந்தியா வர அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் OCI கட்டுப்பாடுகளை தளர்த்தி புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், ‘வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கான, OCI பாஸ்போர்ட் புதுப்பிப்பு காலம், டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இந்தியா செல்ல, புதிய பாஸ்போர்ட் உடன் காலாவதியான பழைய பாஸ்போர்ட்டை எடுத்து வர தேவையில்லை. OCI-ல் உள்ள பழைய பாஸ்போர்ட் எண் அடிப்படையில் அவர்கள் பயணிக்கலாம். அதே சமயம், அவர்கள் கண்டிப்பாக புதிய பாஸ்போர்ட் கொண்டு வந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இந்த நடவடிக்கைக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
