நீங்க 'யாரா' வேணாலும் இருங்க... 'கலங்கிய' கண்களுடன் 'ஜெயிலுக்கு' போன கால்பந்து சூப்பர்ஸ்டார்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபோலி பாஸ்போர்ட் விவகாரத்தில் பிரேசில் அணியின் முன்னாள் வீரரும் கால்பந்து உலகில் புகழ் பெற்றவருமான ரொனால்டினோ போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கு சென்ற சம்பவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.

ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரரும், மேனேஜருமான ராபர்ட்டோ ஆசிஷ் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை குழந்தைகள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றிற்காக பராகுவே சென்றனர். நிகழ்ச்சி முடிந்து இருவரும் ஹோட்டலில் தங்கியிருந்த போது திடீரென ஹோட்டலுக்கு சென்ற பராகுவே போலீசார் அவர்கள் இருவரிடமும் சுமார் 6 மணி நேரம் பாஸ்போர்ட் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அவர்களைக் கைது செய்த போலீசார் கையில் விலங்கு போட்டு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். போலி பாஸ்போர்ட் வழியாக தங்கள் நாட்டுக்குள் நுழைந்ததாக பராகுவே போலீசார் குற்றஞ்சாட்ட, பதிலுக்கு நீதிபதி விசாரணை முடியும் வரை இருவரையும் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். தான் எந்த தவறும் செய்யவில்லை. சமூகத்தில் புகழ் மிக்கவன் என்பதால் வீட்டுக்காவலில் வைக்குமாறு நீதிபதியிடம் ரொனால்டினோ கேட்க, நீதிபதி அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
இதுகுறித்து பராகுவே உள்துறை அமைச்சர், '' நான் ரொனால்டினோவின் கால்பந்து ஆடும் திறமையை மதிக்கிறேன். அதே நேரத்தில் சட்டமும் மதிக்கப்பட வேண்டும். நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் சட்டத்தை மீறினால் தண்டனை நிச்சயம் கிடைக்கும்,'' என தெரிவித்து இருக்கிறார். இந்த சம்பவம் தற்போது உலக அரங்கை அதிர வைத்துள்ளது.
