'சீனாவில் 4 மடங்கு பாதிப்பு அதிகமிருக்கலாம்...' '7 முறை திருத்தப்பட்ட அளவீடுகள்...' ‘ஹாங்காங் ஆய்வாளர்கள் தகவல்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 25, 2020 11:05 PM

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதை விட நான்கு மடங்கு அதிகமாக இருந்திருக்கலாம் என ஹாங்காங் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Impacts in China can be as high as four times-HongKong study

சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சீனாவில் தற்போது வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கிடையே சீனாவில் முன்னதாக ஏற்பட்ட உயிரிழப்புகளை கணக்கிட்டதில் தவறு ஏற்பட்டுள்ளது என சீனா அரசு சமீபத்தில் ஒப்புக்கொண்டது. தற்போது சீனாவில், 82,816 பேர் பாதிக்கப்பட்டு, 4,632 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புகழ்பெற்ற மருத்துவ இதழான லான்செட்டில் வெளியான ஆய்வில், நோயை கண்டறிவதற்கு சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் பயன்படுத்திய ஆரம்ப அளவுகோல்கள் மிகவும் குறுகிய அளவிலானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அளவீடுகள் ஜனவரி 15 முதல் மார்ச் 3 வரையிலான காலக்கட்டத்தில் ஏழு முறை திருத்தப்பட்டது என கூறப்பட்டுள்ளது. அதாவது, பிப்ரவரி 20ம் தேதி நிலவரப்படி, 55,508 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சீனா கூறியிருந்தது.

ஆனால், சீனாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தரவினை ஹாங்காங் ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்ததில், முதல் நான்கு திருத்தங்களின் போது, சீனா கணக்கிடப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 32,000 ஆக இருக்கலாம் என கண்டறிந்துள்ளனர்.

இதன் மூலம் சீனா வெளியிட்ட தரவுகளை விட சுமார் 4 மடங்கு அதிகமாக பாதிப்பு இருக்கலாம் என ஹாங்காங் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.