"இதுக்கெல்லாம் சீனாகிட்ட போகணுமா?".. "ஒரே மாசத்துல கண்டுபுடுச்சுட்டோம்!".. இந்திய மருத்துவர்கள் சாதனை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 11, 2020 03:35 PM

கொரோனா வைரஸ் நோய் பாதிப்புக்கு எதிராக, முதல்கட்டமாக உடலில் ஒரு ஆண்டி பாதி எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான ரேப்பிட் டெஸ்ட் கருவியை புனேவில் உள்ள இந்திய வைராலஜி நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவுடன்(ஐசிஎம்ஆர்) இணைந்து தயாரித்து உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்

ICMR and virology develops 1st Covid19 antibody detection kit

முன்னதாக சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட ரேப்பிட் டெஸ்ட் கருவிகள் தரம் குறைந்ததாகவும் தவறான முடிவுகளை கொடுத்ததாகவும் எழுந்த புகார்களை அடுத்து, லட்சக்கணக்கான கருவிகள் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இந்த நிலையில் அதைத்தொடர்ந்து இந்தியாவிலேயே ஆன்டிபாடி கண்டுபிடிக்கும் பணியில் இந்திய வைரலாஜி நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவும் இணைந்து ஒரே மாதத்துக்குள் ரேப்பிட் டெஸ்ட் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இதுபற்றி வெளியான அறிக்கையில் இந்திய வைராலஜி நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவும் இணைந்து உள்நாட்டிலேயே ஐஜிஜி எலிசா டெஸ்ட் கருவியை, அதாவது கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உள்ளதா என கண்டறியக் கூடிய ஆண்டிபாடி உடலில் உருவாகி உள்ளதா என கண்டறியும் கருவியை கண்டுபிடித்துள்ளதாக மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொண்டு,  இரண்டரை மணி நேரத்தில் 90 மாதிரிகளை பரிசோதிக்க முடியும் என்றும் இதன்மூலம் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் விரைந்து செயல்பட முடியும் என்றும் கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும் என்றும் மும்பையில் உள்ள இரண்டு கொரோனா பாதிப்பு இருக்கும் இடங்களில் இந்த கருவிகள் கொண்டு பரிசோதிக்கப்பட்டதில், துல்லியமான முடிவுகள் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜைடஸ் காடிலா நிறுவனத்துடன் இணைந்து ஐசிஎம்ஆர் மிகப்பெரிய அளவில் இந்த ஆன்டிபாடி டிடெக்டர் கருவியை உற்பத்தி செய்யத் தொடங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் இந்திய மருத்துவர்களும், ஆய்வாளர்களும் களத்தில் இறங்கி ஒரே மாதத்தில் உள்நாட்டிலேயே இப்படி ஒரு வலிமை மிகுந்த ரேப்பிட் கருவியை தயாரிக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.