நடந்த 'உண்மை' மக்களுக்கு தெரிய வேண்டும்... 'என்கவுண்டர்' விவகாரத்தில்... 'தெலுங்கானா' அரசு தலையிடக் கூடாது!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Dec 12, 2019 04:12 PM
பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வரையும் கடந்த வாரம் ஹைதராபாத் காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். நாடே கொண்டாடிய இந்த என்கவுண்டர் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இந்த என்கவுண்டரை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக சுதந்திரமான முழு விசாரணை தேவை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே கூறியதுடன், நடந்த உண்மைகளைத் தெரிந்துகொள்ள மக்களுக்கு முழு உரிமை உள்ளது என்றுகூறி என்கவுண்டர் தொடர்பாக நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து உத்தரவிட்டார்.
மேலும், இந்த விசாரணை ஆணையம் 6 மாதத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் கெடு விதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்துவதால், உச்ச நீதிமன்ற ஆணையம் தேவையில்லை என்ற தெலங்கானா அரசின் வாதத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. உச்ச நீதிமன்ற ஆணையம் நடத்த உள்ள விசாரணையில் மாநில அரசு நடத்தும் புலனாய்வு விசாரணை குறுக்கிடக்கூடாது என்று தலைமை நீதிபதி போப்டே உத்தரவிட்டுள்ளார்.
இதனால் இந்த என்கவுண்டர் விவகாரத்தில் மேலும் பல உண்மைகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
