'தம்பி' ஏற்கனவே 'வார்ன்' பண்ணி இருக்கோம்.. திரும்பவும் 'அந்த' வீடியோவ பாக்குறீங்க?.. 'நெல்லை' இளைஞர்களுக்கு 'செக்' வைத்த போலீஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Dec 07, 2019 08:31 PM
சிறுவர்களின் ஆபாச படங்களை பார்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும், வீடியோ பார்ப்பவர்களின் லிஸ்டை காவல்துறை தயாரித்து வருவதாகவும் கடந்த வாரம் தகவல் வெளியானது. போலீஸ் தரப்பில் இருந்தும் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில் நெல்லையில் சிறுவர்களின் ஆபாச வீடியோவை பார்த்த இளைஞர்களை போலீசார் வார்ன் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக இளைஞர் ஒருவருடன் போலீஸ் பேசும் வாட்ஸ்அப் ஆடியோ ஒன்றும் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆடியோவில் இளைஞரிடம் போலீஸ் ,''நீங்கள் ஆபாச இணையதளத்தில் குழந்தைகள் ஆபாச காட்சியை டவுன்லோடு செய்து பார்த்துள்ளீர்கள். அரசு சார்பாக அது குற்றம் என்று அறிவிக்கப்பட்ட பிறகும் நீங்கள் பார்த்ததால் உங்களுக்கு எச்சரிக்கை செய்து நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். ஆனால் அதன் பிறகும் நேற்று நீங்கள் பார்த்ததால் இப்போது எச்சரிக்கை செய்து பேசுகிறோம். இது சட்டப்படி குற்றம்,'' என்று கூறுகிறார்.
பதிலுக்கு இளைஞர், ''இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்'' என்று கூற, பதிலுக்கு போலீஸ் அந்த இளைஞரை மன்னிப்பது போல ஆடியோ முடிவடைகிறது.
சென்னையில் உள்ள சைபர்கிரைம் போலீசார் செல்போன் எண்களை ரேண்டமாக ஆய்வு செய்து பார்த்தபோது நெல்லை மாவட்டம் மருதகுளம் அருகேயுள்ள செல்போன் கோபுர வரிசையில் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்டோர் வீடியோ டவுன்லோடு செய்ததை கண்டுபிடித்து உள்ளனர். இதில் 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. அதையும் மீறி அவர்கள் மீண்டும் ஆபாச வீடியோ பார்த்ததால் போலீசார் அந்த இளைஞர்களின் எண்ணுக்கு கால் செய்து மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களுக்கு போலீசார் போன் செய்து பேசிய ஆடியோ வெளியானதால், ஆபாச வீடியோ பார்ப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகளால் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் குறையும் என போலீசார் கருதுகின்றனர்.
