"கோதுமைன்னு சொல்லி இதை வளர்த்திருக்காங்க சார்".. போலீசுக்கு போன் செஞ்ச முன்னாள் MLA.. பெங்களூருவில் சுவாரஸ்யம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூருவில் தனது வீட்டுக்கு பின்னால் வளர்ந்திருந்த கஞ்சா செடியை கண்டறிந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரான பேளூர் கோபால கிருஷ்ணா.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே புலிகேசி நகர் பகுதியில் ஆர்டி நகர் மஞ்சுநாதா லேஅவுட் சாலையில் அமைந்துள்ளது முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரான பேளூர் கோபால கிருஷ்ணாவின் வீடு. சமீப காலமாக இவரது வீட்டுக்கு பின்புறம் சிலர் கோதுமை செடிகளை வளர்த்து வந்தனர். கோபால கிருஷ்ணாவும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், சில தினங்களுக்கு முன்னர் அவர் கண்ட காட்சி அவரையே திடுக்கிட செய்திருக்கிறது.
உயரமாக வளர்ந்த செடி
கோபால கிருஷ்ணா சில நாட்களுக்கு முன்னர் வீட்டின் பின்புறம் தூரத்தில் பச்சையாக செடி செழித்து வளர்ந்திருப்பதை கவனித்திருக்கிறார். கோதுமை செடிகள் இப்படி இருக்காதே என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து தனது வீட்டில் பணிபுரியும் நபர்களை அழைத்து அதுகுறித்து கேட்டிருக்கிறார். அவர்கள் சென்று பார்க்கும்போதுதான் அது கஞ்சா செடி என்பது தெரிய வந்திருக்கிறது.
புகார்
இதனால், அதிர்ச்சியடைந்த கோபால கிருஷ்ணா உடனடியாக ஆர்டி நகர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். கோதுமை செடிகளை தாண்டி உயரமாக வளர்ந்திருந்ததால் சந்தேகமடைந்ததாகவும், பின்னர் செடியை ஆய்வு செய்ததில் அது கஞ்சா செடிதான் என்பது தெரியவரவே உடனடியாக புகார் அளித்ததாகவும் காவல்துறை அதிகாரிகளிடத்தில் தெரிவித்திருக்கிறார் பேளூர் கோபால கிருஷ்ணா.
இதனை தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த ஆர்டி நகர் காவல்நிலைய அதிகாரிகள், கஞ்சா செடியை முற்றிலுமாக அழித்தனர். மேலும், சட்ட விரோதமாக கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்துவந்த மர்ம நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்,
பெங்களூருவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பேளூர் கோபால கிருஷ்ணாவின் வீட்டுக்கு பின்னால் கஞ்சா செடியை சில மர்ம நபர்கள் வளர்த்து வந்தது அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி.. ஹாஸ்பிடல் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு..!