கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேத்தி திடீர் தற்கொலை.. காரணம் என்ன? தீவிர விசாரணை
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூர் : கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரான எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எடியூரப்பாவுக்கு பத்மாவதி என்ற மகள் உள்ளார். இவரது மகளான சவுந்தர்யா, பெங்களூர் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில், மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும், நீரஜ் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.
கணவர் நீரஜும் மருத்துவராக பணிபுரிந்து வரும் நிலையில், இவர்கள் இருவரும் மத்திய பெங்களூருவில், மவுண்ட் கார்மல் கல்லூரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். நீரஜ் - சவுந்தர்யா தம்பதிக்கு, ஆறு மாத கைகுழந்தையும் உள்ளதாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்நிலையில், இன்று காலை, சவுந்தர்யாவின் கணவர் நீரஜ் வேலைக்கு சென்ற சமயத்தில், தனியாக இருந்த சவுந்தர்யா, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, வீட்டிற்கு வந்த பணிப்பெண், காலிங் பெல் அழுத்தியுள்ளார். தொடர்ந்து கத்தவும் செய்துள்ளார்.
ஆனால், கதவு திறக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதன் பிறகு, சவுந்தர்யாவின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக வந்த கணவர், மனைவியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
அங்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளித்தும், பலனின்றி சவுந்தர்யா உயிரிழந்துள்ளார். தொடர்ந்து, சவுந்தர்யாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், குடும்ப பிரச்சனை தான் காரணமாக இருக்கும் என்றும், இதனால் சவுந்தர்யா இந்த முடிவை எடுத்திருப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி, உறுதியான தகவல் எதுவும் வெளிவராத நிலையில், போலீசார் விசாரணைக்கு பிறகே சரியான காரணங்கள் தெரிய வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.