பெங்களூரில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பெங்களூரின் பயப்பனஹள்ளி பகுதியை சேர்த்தவர் வினயா விட்டல். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில வருடங்களாக GM Palya பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கிவந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பணிமுடித்து வீட்டிற்கு வந்த வினயா, அடுத்தநாள் காலை உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்றிருக்கிறார்.
கடந்த இரண்டு வருடங்களாக அருகில் இருக்கும் ஜிம்மிற்கு செல்லும் வழக்கம் வினயாவிற்கு இருந்திருக்கிறது. அதன்படி, கடந்த சனிக்கிழமை காலை 8 மணிக்கு வழக்கமாக செல்லும் ஜிம்மிற்கு சென்று 'ஸ்குவாட்' பயிற்சியை மேற்கொண்டார் வினயா.
விபரீதம்
பயிற்சியின் போது திடீரென வினயா நிலைகுலைந்து கீழே விழுந்திருக்கிறார். இதனை அடுத்து, ஜிம் பயிற்சியாளர் மற்றும் அங்கிருந்த சிலர், உடனடியாக அவரை அருகில் இருக்கும் சிவி ராமன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வினயா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும், வினயாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாகவே அவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
விசாரணை
இந்நிலையில், வினயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர் காவல்துறையினர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பயப்பனஹள்ளி காவல்துறை தெரிவித்திருக்கிறது.
வினயா தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் ஜெயாம்மா இதுகுறித்து பேசுகையில்," பழகுவதற்கு இனிய குணம் கொண்டவர் வினயா. அன்று வழக்கம் போல பணிக்கு சென்றுவந்தார். அடுத்த நாள், உடற் பயிற்சிக்கு நிலையத்திற்கு சென்றார். ஆனால், அன்று வினயாவின் உடல் தான் மீண்டும் வீட்டிற்கு வந்தது" என கவலையுடன் குறிப்பிட்டார்.
உடற் பயிற்சி செய்துகொண்டிருக்கும் போது மயங்கி விழுந்த, பெண்மணி மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பது அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் மறைந்த பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரும் இதேபோல் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போது, ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.