கொடுத்த பணத்துக்கு கணக்கு காட்டாததால் கோபம்.. மகனை பழிவாங்க அப்பா செஞ்ச திடுக்கிடும் காரியம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபண விவகாரத்தில் எழுந்த சண்டையில் மகனை பழிவாங்க தந்தை செய்த செயல் பெங்களூர் நகர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொழில்
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள சாம்ராஜ் பேட் பகுதியில் வசித்து வருபவர் பாபு என்ற சுரேந்திர குமார். தொழிலதிபரான இவருக்கு 52 வயதாகிறது. இவர் சமீபத்தில் தன்னுடைய துணி வியாபாரத்தை தனது மகன் அர்பித் சேட்டியாவிடம் ஒப்படைத்து இருந்திருக்கிறார். அர்பித்திற்கு 25 வயதாகிறது. தொழிலுக்காக தனது மகனுக்கு சுமார் 1.5 கோடி ரூபாயை சுரேந்திர குமார் வழங்கியதாக தெரிகிறது.
வாக்குவாதம்
இந்நிலையில் பெங்களூரு நகரின் வால்மீகி பகுதியில் அமைந்துள்ள தனது கம்பெனிக்கு வந்து இருக்கிறார் அர்பித். அப்போது அங்கு வந்த சுரேந்திர குமார் தான் கொடுத்த பணத்திற்கு கணக்கு கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அர்பித் ஒழுங்காக பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த சுரேந்திர குமார் கோபத்தில் அவர் மீது ஏதோ திரவத்தை ஊற்றி இருக்கிறார். அதன் பிறகு சுரேந்தர் குமார் தீ வைக்க அர்பித்தின் உடல் எரிய துவங்கியிருக்கிறது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியுடன் ஓடி வந்து அருகில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அர்பித்தை அனுமதித்து உள்ளனர்.
சோகம்
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அர்பித் நேற்று காலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு காவல்துறை சுரேந்திர குமாரை கைது செய்திருக்கிறது.
விசாரணையில் கொடுத்த பணத்திற்கு கணக்கு காட்டாததால் அர்பித்தின் மீது தீ வைத்ததாக சுரேந்திர குமார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
விசாரணையில் சுரேந்திர குமார் வெள்ளை தின்னரை அர்பித்தின் மீது ஊற்றியதாக தெரியவந்திருக்கிறது. மேலும், 60 சதவீத தீக்காயங்களுடன் அர்பித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெங்களூருவில் பண விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் மகனையே தந்தை ஒருவர் கொலை செய்திருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
