'அதிர்ச்சியான சென்னை ரசிகர்கள்'... 'மனதிலிருந்த வலியோடு புஜாரா சொன்ன அந்த வார்த்தை'... சிஎஸ்கே போட்ட மாஸ்டர் பிளான்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்றைய ஐபிஎல் ஏலத்தில் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தது சென்னை அணியைத் தான். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் ஏலம் நேற்று நடந்து முடிந்தது. இதில் சிஎஸ்கே எடுத்த சில முடிவுகள் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்தின் மொயின் அலியை ரூ.7 கோடிக்கும், கிருஷ்ணப்ப கவுதமை ரூ.9.25 கோடிக்கு ஏலம் எடுத்து பலருக்கும் ஷாக் கொடுத்தது சிஎஸ்கே. ஆனால் இதற்கு எல்லாம் ஒரு படி மேலே டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தூணாகக் கருதப்படும் செடேஷ்வர் புஜாராவை ரூ.50 லட்சத்துக்கு ஏலம் எடுத்து அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது சிஎஸ்கே.
சிஎஸ்கே எடுத்த இந்த முடிவு அதன் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் சற்று அதிர்ச்சியைக் கொடுத்தது என்றே சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம் ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேனான புஜாரா எப்படி டி20 பார்மெட்டுக்கு செட் ஆவார் என்பது தான். இதைத் தான் சென்னை ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் கேள்வியாக எழுப்பினர். ஆனால் அவர்களின் கேள்வியை அப்படியே கடந்து சென்று விடவும் முடியாது.
ஐபிஎல் தொடரில் ஏற்கெனவே கொல்கத்தா, பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்காகக் கடந்த 2008 முதல் 2014 வரை புஜாரா விளையாடியுள்ளார். அதன் மூலம் மொத்தம் 30 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 390 ரன்களை அவர் குவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் புஜாராவின் ஸ்ட்ரைக் ரேட் 99.74. தற்போது சிஎஸ்கே மூலம் மீண்டும் ஐபிஎல் ஜெர்சியை அணிய இருக்கிறார் புஜாரா. அதேநேரத்தில் புஜாரா ஐபிஎல் போட்டிகளில் விளையாட கூடாதா எனவும் ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
இந்தியாவின் சுவர் ராகுல் டிராவிட் ஓய்வுபெற்ற பின்பு அவரின் இடத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் நிலைத்து நின்று ஆடக்கூடிய பேட்ஸ்மேன்னாக புஜாரா தன்னை நிலைநிறுத்தி உள்ளார். அதற்காக புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத்தான் செட் ஆவார் என்ற மனநிலையில் இருப்பது முற்றிலும் தவறு என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்தியாவுக்காக மொத்தம் 5 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
அதுவும் கடைசியாக அவர் 2014 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக விளையாடி இருக்கிறார். அதன் பின்பு ஒருநாள் போட்டிகளில் புஜாராவுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதுவே அவரது திறமையை நிரூபிக்க முடியாமல் போனதற்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம் என ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள். இதற்கிடையே ஐபிஎல் தொடர்பாக அண்மையில் பேசிய புஜாரா "ஐபிஎல் போட்டிகளில் ஓர் அங்கமாக இருக்க விரும்புகிறேன்.
எனக்கு விளையாட வாய்ப்பளித்தால் நிச்சயம் சிறப்பாகச் செயல்படுவேன்" என்று புஜாரா தனது மனதிலிருந்த வலியைத் தான் அவர் வெளிப்படுத்தியுள்ளார் எனப் பல ரசிகர்கள் பார்க்கிறார்கள். ஆனால் புஜாராவின் வார்த்தையிலிருந்த உறுதி தான் சிஎஸ்கே அணியினரை ஈர்த்திருக்கும் என ரசிகர்கள் கருதுகிறார்கள்.
இது குறித்துப் பேசியுள்ள சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி "ஆஸ்திரேலியாவில் புஜாரா அபாரமாக விளையாடினார். அவருக்கான அங்கீகாரமாகவும் அவரை கௌரவிக்கும் வகையிலும் ஏலத்தில் எடுத்திருக்கிறோம். அவர் ஒரு உண்மையான வீரர் தன்னுடைய வியர்வையையும் ரத்தத்தையும் நாட்டுக்காக அர்ப்பணித்தவர். அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.
இந்நிலையில் எப்போதும் பல சர்ப்ரைஸ்களை வைத்திருக்கும் சிஎஸ்கே, புஜாராவை தேர்வு செய்கிறார்கள் என்றால் அதில் அடுத்த கடத்திற்கான திட்டம் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. டெஸ்ட் போட்டி என்றால் ராகுல் டிராவிட் என்று இருந்தாலும், ஒரு நாள் போட்டிகளில் அவர் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி தனது தனித் திறமையை நிலைநிறுத்திக் கொண்டார்.
அதேபோன்று சிஎஸ்கே புஜாராவிற்கு விளையாடச் சரியான வாய்ப்பை வழங்கினால், ''என்னால் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்ல டி20 போட்டியிலும் சாதிக்க முடியும் என்பதை புஜாரா நிச்சயம் நிரூபிப்பார் என்பதே நிதர்சனமான உண்மை.