ஏலத்தில் ‘கேதர் ஜாதவை’ எடுத்தது ஏன்..? ஹைதராபாத் பேட்டிங் ஆலோசகர் லக்ஷ்மன் கொடுத்த விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகேதர் ஜாதவை ஏலத்தில் எடுத்து குறித்து ஹைதராபாத் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் வி.வி.எஸ் லக்ஷ்மன் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வலுவான அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி சிறப்பாக விளையாடி 3-வது இடத்தை பிடித்தது. அதனால் பெரும்பாலான முக்கிய வீரர்களை ஹைதராபாத் அணி விடுவிக்கவில்லை. அதேவேளையில் கேதர் ஜாதவை 2 கோடி கொடுத்து எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக விளையாடிய கேதர் ஜாதவ், மோசமான ஆட்டம் காரணமாக இந்த ஆண்டு அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக 8 போட்டிகளில் விளையாடிய கேதர் ஜாதவ் 62 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல் 2019 ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 162 ரன்களே கேதர் ஜாதவ் எடுத்தார்.
அதனால் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின் முதல் சுற்றில் கேதர் ஜாதவை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இதனை அடுத்து கடைசி சுற்றில் ஹைதராபாத் அணி அவரை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கேதர் ஜாதவை ஏலத்தில் எடுத்தது குறித்து ஹைதராபாத் அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், ஆலோசகருமான வி.வி.எஸ் லக்ஷ்மன் ANI ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ‘கேதர் ஜாதவின் அனுபவத்தை வைத்து எங்கள் மிடில் ஆர்டரை பலப்படுத்த முடியும். சில வருடங்களாக மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்களை எதிர்பார்த்திருந்தோம். கேதர் ஜாதவ் சர்வதேச அனுபவமுள்ள ஒரு சிறந்த பவுலர். அவர் எங்களுடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சிதான்’ என வி.வி.எஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
