'திடீரென அதிகரித்துக்கொண்டே போன பெண்ணின் எடை'... 'இப்படி நாங்க பாத்ததே இல்லை'... 'பரிசோதனைக்கு பின் அதிர்ந்துநின்ற மருத்துவர்கள்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி அப்போலோ மருத்துவர்கள் பெண் ஒருவருடைய வயிற்றிலிருந்து 50 கிலோ எடையுள்ள கட்டி ஒன்றை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
டெல்லியை சேர்ந்த பெண் ஒருவருக்கு திடீரென கடந்த சில மாதங்களாக உடல் எடை அதிகரித்து வந்துள்ளது. ஒருகட்டத்தில் அவருடைய உடல் எடை 106 கிலோவாகி, சுவாசக் கோளாறு, அடிவயிற்றில் கடுமையான வலி மற்றும் நடப்பது, தூங்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்ல, அங்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கருப்பையில் கட்டி ஒன்று வளர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிக எடையுடன் இருந்த அந்த கட்டி குடலுக்கு அழுத்தம் கொடுத்ததாலேயே அவருக்கு கடுமையான வயிற்று வலியும், ஹீமோகுளோபின் அளவு குறைந்து கடுமையான ரத்த சோகையும் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அப்போலோ மருத்துவமனையின் இரப்பை, குடல் மற்றும் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை மூத்த ஆலோசகர் டாக்டர் அருண் பிரசாத் தலைமையிலான குழு இன்று மூன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து 50 கிலோ எடை கொண்ட அந்த கட்டியை வெற்றிகரமாக அகற்றியுள்ளது.
இதுகுறித்துப் பேசியுள்ள டாக்டர் அருண் பிரசாத், "ஒரு நபரின் எடையில் ஏறக்குறைய பாதி எடை கொண்ட கட்டியை நாங்கள் பார்த்ததே இல்லை. 2017ஆம் ஆண்டு ஒரு பெண்ணின் கருப்பையில் இருந்து 34 கிலோ எடை கொண்ட கட்டி அகற்றப்பட்டுள்ளது. இப்போது 50 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றுவது மிகவும் சவாலாக இருந்தது. அவருக்கு ஹீமோகுளோபின் அளவும் குறைவாக இருந்ததால் அறுவை சிகிச்சைக்கு முன்னும், பின்னும் 6 யூனிட் இரத்தம் ஏற்றப்பட்டது.
அத்துடன் லேபரோஸ்கோபி உபகரணங்களை பயன்படுத்த போதிய இடம் இல்லாததால் பாரம்பரிய அறுவை சிகிச்சை முறைகளையே கையாள வேண்டி இருந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அதிருஷ்டவசமாக அந்தக் கட்டியால் வேறு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அறுவை சிகிச்சைக்குப் பின் அவருடைய உடல் எடை 56 கிலோவாக குறைந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.