'ஐபோன், விமான பணிப்பெண் வேலை என'... 'ஆளுக்கேற்ப வலை விரித்து சென்னை இளைஞர் பார்த்த வேலை'... 'வெளியான திடுக்கிடும் தகவல்கள்!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுவந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேப்பேரியை சேர்ந்த திலீப் (28) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையில் திலீப் என்ற அந்த இளைஞருக்கு, கீழ்பாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் பிரவீன் என்பவரிடம் ஆப்பிள் செல்போன்களை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி ரூ 2,75,000 மோசடி செய்தது, விமான பணிப்பெண் வேலை வாங்கி தருவதாக கூறி பேஸ்புக் மூலம் ஏராளமான பெண்களிடம் பழகி லட்சக்கணக்கில் மோசடி செய்தது என பல்வேறு மோசடிகளில் தொடர்புள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பிரியா என்ற பெண் போலீசில் நகை திருட்டு புகார் ஒன்றை திலீப் மீது கொடுத்துள்ளதாகவும், பதிலுக்கு அந்த பெண் மீது திலீப்பும் புகார் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு முறை சிறைக்கு சென்றுள்ள திலீப், தற்போது நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.