'5 ஆயிரம் மில்லி லிட்டர் வரை ஆர்டர், 120 ரூபாய் டெலிவரி சார்ஜ்'... 'சரக்கு வீட்டிற்கே டெலிவரி'... அதிரடி முடிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாமதுக்கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வீடுகளுக்கே சென்று மதுபானங்கள் விநியோகம் செய்யும் திட்டத்தை இரண்டு மாநில அரசுகள் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஊரடங்கு உத்தரவில் தளர்வு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திங்கள் அன்று பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனால் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது. 40 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், பலரும் அதிகமான மது பாட்டில்களை வாங்கி சென்றார்கள்.
அதே நேரத்தில் பெரும்பாலான இடங்களில் தனி மனித இடைவெளியைப் பின்பற்றவில்லை. இதனால் மதுக்கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வீடுகளுக்கே சென்று மதுபானங்கள் விநியோகம் செய்யும் திட்டத்தை சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் மாநில அரசுகள் முன்னெடுத்துள்ளது.
அதே நேரத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டல பகுதிகளில் மட்டும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால், மதுபானங்கள் வீட்டிற்கே கொண்டு கொடுக்கப்படும் என சத்தீஸ்கர் மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒருவர் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் மில்லி லிட்டர் வரை ஆர்டர் செய்து கொள்ளலாம். அதற்கு டெலிவரி கட்டணமாக 120 ரூபாய் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வருவாயை அதிகரிக்க மதுபானங்களுக்குக் கூடுதல் வரி விதிக்கவும் பஞ்சாப் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விலை அதிகரித்தாலும் மது பிரியர்கள், நீண்ட வரிசையில் நின்று மது வாங்கி செல்வதை பெரும்பாலான இடங்களில் பார்க்க முடிகிறது.
