'61500 கோடி' தாரோம் ஒன்று சேர்ந்த 'உலக' நாடுகள்... 'சீனாவுடன்' சேர்ந்து அமெரிக்காவும் மிஸ்ஸிங்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ்க்கு எதிராக மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக உலக நாடுகள் ஒன்றிணைந்து 61 ஆயிரத்து 500 கோடியை நிதியாக தர முன்வந்துள்ளன.
கொரோனா உருவாகி சுமார் 6 மாதங்கள் கடந்து விட்டது. ஆனால் இதுவரை எந்தவொரு உலக நாடுகளும் அதற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. உலக பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கி சரிந்து செல்வதால் கொரோனாவுக்கு கண்டிப்பாக தடுப்பூசி கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் உள்ளன.
இதற்கிடையே கொரோனா வைரஸ் மருந்து ஆராய்ச்சிக்கு சர்வதேச அளவில் நிதி திரட்டுவதற்கான 40 நாடுகளின் தலைவர்கள் கூட்டம், ஐரோப்பிய கூட்டமைப்பின் சார்பில் பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்ஸ் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. காணொலி காட்சி வழியாக நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு ஐரோப்பிய கமிஷன் ஏற்பாடு செய்திருந்தது.
இதில் இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் என சுமார் 40 நாடுகள் ஒன்றிணைந்து இந்த நிதியை அளிக்க முன்வந்து இருக்கின்றன. ஆனால் பொருளாதார ரீதியில் மிகவும் வலுவான நாடுகளாக திகழும் சீனா, அமெரிக்கா இரண்டு நாடுகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கொரோனா வைரஸ் விவகாரத்தில் இரு நாடுகளும் ஒன்றையொன்று மாற்றி, மாற்றி குற்றஞ்சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.