'மேடம், உங்க பர்ஸை கொஞ்சம் கொடுங்க'... 'அப்படியே கார் சீட்டையும் செக் பண்ணுங்க'... போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக பிரபலம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்கு வங்காள மாநில பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணியான (Yuva Morcha) பொதுச் செயலாளராக பணியாற்றி வருபவர் பாமெலா கோஸ்வாமி. இவர் வந்த காரை நிறுத்திய போலீசார், அதனைச் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறினார்கள். இதையடுத்து பாமெலா கோஸ்வாமி வைத்திருந்த மணி பர்ஸ் மற்றும் காரின் இருக்கைக்குக் கீழே போலீசார் சோதனை செய்தனர். அப்போது 90 கிராம் கொக்கைன் கைப்பற்றப்பட்டது.
மேலும் அவருடன் பயணம் செய்த பாஜக இளைஞரணியைச் சேர்ந்த பிராபிர் குமார் தேவும் கைது செய்யப்பட்டுள்ளார். நியூ அலிப்பூர் பகுதியில் வைத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிய போது அவர் கூச்சலிட்டார்.
இந்த சம்பவம் குறித்துப் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்திரிமா பட்டாச்சார்யா, ''இந்த சம்பவத்தினால் மேற்கு வங்கத்திற்குத் தான் களங்கம். இது தான் வளர்ந்து வரும் பாஜக உறுப்பினர்களின் உண்மை முகம். இதற்கு முன்னதாக பாஜக உறுப்பினர்களின் பெயர் குழந்தை கடத்தல் தொடர்பான வழக்குகளிலும் அடிபட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையே பாமெலா கோஸ்வாமிக்கு போதைப் பொருட்களைக் கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என போலீசாருக்கு நீண்ட நாட்களாகவே சந்தேகம் இருந்துள்ளது. அதனால் அவரை நீண்ட நாட்களாகப் பின்தொடர்ந்த பிறகே கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்கள்.