'பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அமித்ஷாவின் வருகை'... 'அதிமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை'... இவங்க இரண்டு பேரையும் சந்திப்பாரா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அமித்ஷாவின் தமிழக வருகை பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகச் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5½ மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் வியூகங்களை வகுக்க ஆரம்பித்து விட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை ஜனவரி மாதம் காஞ்சிபுரத்தில் தொடங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் வலுவாகக் காலூன்றத் திட்டமிட்டுள்ளது.
இதற்காகத் தேர்தல் வியூகங்களை ஆரம்பித்து விட்டது. சமீபத்தில் காங்கிரசிலிருந்து விலகி குஷ்பு பாஜகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பா.ஜனதா மூத்த தலைவரும் மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா நாளை சென்னை வருகிறார். தமிழகத்துக்குத் தேவையான பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைக்கும் அமித்ஷா, சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றியும் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருபெரும் தலைவர்கள் இல்லாமல் நடைபெறும் இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும் சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்பதில் கடும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதனால் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கேட்டுப் பெற்று அதில் களமிறங்கி, வெற்றிக்கனியைப் பறிக்கவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது.
இதற்கான வியூகத்தையே நாளை அமித்ஷா தொடங்க உள்ளார். இது தொடர்பாக அ.தி.மு.க. தலைவர்களுடன் நாளை அமித்ஷா முதல்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்க உள்ளார். நாளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசுகிறார்கள். அப்போது அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி தொடர்பாக விரிவாகப் பேச உள்ளனர்.
இதனிடையே தமிழகச் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த்தை எப்படியும் களம் இறக்கி விட வேண்டும் என்பதில் டெல்லி பா.ஜனதா தலைவர்கள் தீவிரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக நாளை சென்னை வரும் அமித்ஷா, ரஜினிகாந்த்தைச் சந்தித்துப் பேசவும் வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒருவேளை நேரில் சந்திக்க வாய்ப்பு இல்லாவிட்டால் வீடியோ கால் வழியாக ரஜினியுடன் பேச அமித்ஷா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
அதேபோன்று சென்னை வரும் அமித்ஷாவை, அழகிரி சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக மதுரையிலிருந்து அழகிரி காரில் இன்று சென்னை புறப்பட்டு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அமித்ஷா இதற்கு முன்பு வகுத்த தேர்தல் வியூகங்கள் பல்வேறு மாநிலங்களிலும் பா.ஜனதா கட்சிக்கு வெற்றியை ஈட்டி தந்துள்ளன.
எனவே தமிழகத்திலும் நிச்சயம் அவரது வியூகங்கள் வெற்றி பெரும் என பாஜக தொண்டர்கள் ஆர்வமுடன் உள்ளனர். எனவே வியூகம் எப்படி கை கொடுக்கப் போகிறது? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மற்ற செய்திகள்
