'RCB'யை விடாம துரத்தும் அந்த 'UNLUCKY' நம்பர்... 10 வருஷமா இப்டி ஒரு சோதனை வேறயா?..
முகப்பு > செய்திகள் > விளையாட்டு15 ஆவது ஐபிஎல் தொடரின் மூன்றாம் நாளான இன்று நடைபெறவுள்ள நான்காவது லீக் போட்டியில், புதிய அணிகளான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளது.
இரண்டு அணிகளும் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ளதால், போட்டி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் தற்போதே ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
அடுத்த போட்டிக்கான நேரம் நெருங்கி வரும் வேளையிலும், நேற்றைய போட்டி குறித்து தான் தற்போது வரை ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதிரடி காட்டிய டு பிளஸ்ஸிஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள், நேற்றைய போட்டியில் மோதின. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக, கேப்டன் டு பிளஸ்ஸிஸ், 88 ரன்கள் எடுத்து, சிக்ஸர் மழையை பறக்க விட்டார்.
நல்ல ஸ்கோர் அடிச்சும் தோத்தாங்க..
தொடர்ந்து, கடின இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி, ஆரம்பத்தில் இருந்தே அதிரடியுடன் ஆடியது. அனைத்து வீரர்களும், தங்கள் பங்கிற்கு ரன் சேர்க்க ஆரம்பிக்க, 19 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்து, அசத்தல் வெற்றியை பஞ்சாப் அணி பெற்றது. பெங்களூர் அணியின் பீல்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டும் கைகொடுக்காமல் போக, நல்ல ஸ்கோர் அடித்தும் தோல்வி அடையும் நிலை உருவானது.
'Unlucky' 205
அதிக ஸ்கோர் அடித்தும், பெங்களூர் அணியால் வெற்றி பெற முடியாமல் போனது பற்றி, அந்த அணியின் ரசிகர்கள் வேதனையுடன் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இன்னொரு பக்கம், பெங்களூர் அணியின் அதிர்ஷ்டம் இல்லாத 205 ரன்கள் பற்றியும், ரசிகர்கள் கருத்தினை வெளியிட்டு வருகின்றனர்.
ஆர்சிபி அணி, இதுவரை 4 முறை 205 ரன்கள் அடித்துள்ளது. எதிரணியினருக்கு 206 ரன்கள் என்ற இலக்கை நான்கு முறை, பெங்களூர் அணி நிர்ணயித்த போட்டியிலும் அவர்கள் தோல்வியைத் தான் தழுவி உள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூர் அணிக்கு எதிராக 206 ரன்கள் இலக்கை எட்டிப் பிடித்தது.
4 முறை தோல்வி
தொடர்ந்து, மீண்டும் அதே சென்னை அணி, 2018 ஆம் ஆண்டில் பெங்களூரின் 206 ரன்களை அடைந்து வெற்றி பெற்றது. பின்னர், 2019 ஆம் ஆண்டு, கொல்கத்தா அணியும், தற்போதைய சீசனில், பஞ்சாப் அணியும், அதே 206 ரன்கள் என்ற இலக்கை எட்டி வென்றுள்ளது. இது போக, கடந்த 2012 ஆம் ஆண்டின் போது, சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்தது. அதே போல, நேற்றைய போட்டியிலும், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்களை பஞ்சாப் அணி எடுத்தது.
இதனால், 205 என்பது பெங்களூர் அணிக்கு அதிர்ஷ்டம் இல்லாத நம்பர் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். மிக கடினமான ஸ்கோர் என்றாலும், 205 ரன்னை பெங்களூர் அடித்து விட்டால், அந்த போட்டியில் அவர்கள் தோல்வி தான் அடைகிறார்கள் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.