'யாரும் பயப்படாதீங்க'... 'பெங்களூர் அலுவலகத்தில் கொரோனா'... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட 'கூகுள்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூருவில் செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, கூகுள் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், பல நாடுகளும் போர்க்கால அடிப்படையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தச்சூழ்நிலையில் பெங்களூருவில் செயல்பட்டு வரும் கூகுள் நிறுவன ஊழியருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூகுள் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பைக் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதோடு முக்கிய முடிவு ஒன்றையும் கூகுள் நிறுவனம் எடுத்துள்ளது. அதில், ''பெங்களூரு அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு ஊழியருக்கு கொரோனா வைரஸ் (கொவைட்-19) நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பெங்களூரு அலுவலகத்தில் பணியிலிருந்த அவருக்கு, கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அன்றிலிருந்து அந்த ஊழியர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
எனவே, முன் எச்சரிக்கை நடவடிக்கையாகப் பெங்களூரு அலுவலகத்தில் உள்ள ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளோம். ஊழியர்கள் இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
