'நெஞ்சை உலுக்கிய கோர விபத்து'... 'பிரமை பிடித்தது போல இருந்த 3 வயது குழந்தை'... திக் திக் நிமிடங்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதுபாயிலிருந்து IX1344 ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் வந்தே பாரத் திருப்பி அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக இயக்கப்பட்டது. 191 பயணிகளுடன் வந்த விமானம் கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமானத்தில் இரவு 7:40 மணியளவில் தரையிறங்கத் தொடங்கியது. விமானம் 35 அடியில் இறங்கும்போது இரண்டு துண்டாக உடைந்து உள்ளது. இந்த கோர விபத்தில் 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
விபத்து நடந்ததும் அந்த பகுதிக்கு விரைந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள், விமான நிலைய உயரதிகாரிகள் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்கள். அந்த பகுதிக்கு விரைந்த மருத்துவ குழுவினர் காயமடைந்தவர்களுக்கு முதலுதவிகளைச் செய்தனர். இருக்கைகளுக்கு இடையே சிக்கியிருந்த பயணிகளை மீட்ட போலீசார் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். விமானத்தில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதற்கிடையே இந்த விபத்தில் தப்பிப் பிழைத்த 3 வயதுக் குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய அந்த குழந்தை விபத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. விபத்து காட்சிகள் அதன் கண்முன்பே இருப்பதால், அந்த குழந்தை இன்னும் சாதாரண நிலைக்குத் திரும்பவில்லை. இதையடுத்து அந்த குழந்தையை போலீசார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்.