'அப்பா 900 கோடி'... 'போடா 900 ரூபாயா இருக்கும், நல்லா பாரு'... 'நெஞ்சை படபடக்க வைத்த மெசேஜ்'... உடனே ATM கார்டை எடுத்து கொண்டு ஓடிய பெற்றோர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவாழ்க்கையில் சில சம்பவங்கள் கற்பனையைத் தாண்டி நடந்து விடுவது உண்டு. அப்படி ஒரு சம்பவம் தான் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது.
பிஹார் மாநிலம் கதிஹார் மாவட்டம் பாகுரா பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாஸ்தியா கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் குருச்சந்திர விஸ்வாஸ், ஆசித் குமார். இருவரும் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர். தற்போது அந்த மாணவர்கள் படித்து வரும் பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் கிராம வங்கியில் வங்கிக் கணக்கு உருவாக்கிக் கொடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குருச்சந்திர விஸ்வாஸ் மற்றும் ஆசித் குமாருக்குக் கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்கில் திடீரென 900 கோடி டெபாசிட் ஆனது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைத்த சிறுவர்கள் தங்கள் பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார்கள். ஆனால் நல்லா பாருங்க அது 900 ரூபாயா இருக்கலாம் என அந்த சிறுவர்களின் பெற்றோர் கூறியுள்ளார்கள்.
இதையடுத்து வங்கிக் கணக்கில் ரூ.900 கோடி டெபாசிட் ஆனது குறித்து செல்போனில் வந்த குறுஞ்செய்தியை தங்கள் பெற்றோரிடம் அந்த சிறுவர்கள் காட்டியுள்ளார்கள். இதனைப் பார்த்து அதிர்ந்துபோன சிறுவர்களின் பெற்றோர், உடனே ஏடிஎம் சென்று வங்கியின் கணக்கு குறித்து ஆய்வு செய்தனர். அதில் ஆசித் குமார் கணக்கில் ரூ.6.2 கோடியும், குருச்சந்திர விஸ்காஸ் கணக்கில் ரூ.90 கோடியும் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே வங்கிக்குச் சென்று நடந்த சம்பவங்களை வங்கி அதிகாரிகளிடம் சிறுவர்களின் பெற்றோர் கூறிய நிலையில், அதனைக் கேட்டு வங்கி அதிகாரிகள் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். உடனே வங்கி அதிகாரிகள் கணக்கை ஆய்வு செய்தபோது, கணக்கில் குறைந்தபட்ச பணம் மட்டுமே இருந்தது, ஆனால், கணினியின் கணக்கில் ரூ.900 கோடி காட்டியது கண்டு ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றார்கள்.
இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உதயன் மிஸ்ராவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவர் இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது தொடர்பாக ஆய்வு செய்த அதிகாரிகள், வங்கியின் கணினிச் செயல்பாட்டு முறையில் சில கோளாறுகள் நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாகக் கூறியுள்ளார்கள்.
அதேநேரத்தில் சிறுவர்களின் கணக்கில் குறைவான பணம் இருக்கிறது, ஆனால், கணினியின் கணக்கில் ரூ.900 கோடி காட்டுகிறது என்பது தான் புரியாமல் உள்ளது. மேற்கொண்டு ஆய்வு நடைபெற்று வருகிறது. முழுமையான ஆய்வுக்குப் பிறகு தான் என்ன நடந்தது என்பது குறித்த முழு விவரம் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.