‘சும்மா விளையாடுனேன்..!’ ஒரே ஒரு ட்வீட்.. சைலண்டா தேர்வுக்குழுவை ‘கலாய்த்த’ சஹால்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து சஹால் கிண்டலாக கமெண்ட் செய்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய வீரர்களின் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. இதில் பல இளம் வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. அதேபோல் லிமிடெட் ஓவருக்கான இந்திய அணியில் 4 வருடங்களாக இடம் கிடைக்காமல் இருந்த தமிழக வீரர் அஸ்வின் இடம்பெற்றுள்ளார்.
ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களான சாஹல், குல்திப் யாதவ், மற்றும் தமிழக வீரர்களான நடராஜன், வாசிங்டன் சுந்தர் ஆகியோரின் பெயர் இடம்பெறவில்லை. இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விளக்கம் அளித்த தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா, ‘நடராஜன், வாசிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் காயத்தால் ஓய்வில் உள்ளனர். அதனால் அவர்கள் அணியில் இடம்பெறவில்லை. சுழற்பந்து வீச்சாளரை பொறுத்தவரை ராகுல் சஹார் சற்று வேகமாக வீசுகிறார். இது டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் நன்றாக பலனளிக்கும். அதனால்தான் சாஹலுக்கு பதிலாக ராகுல் சஹார் இடம்பெற்றுள்ளார்’ என விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, வரும் ஐபிஎல் தொடரில் எந்த மாதிரியான முடிவுகளை எடுத்தால் வெற்றி பெற முடியும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், வேகமாக பந்து வீசக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
Faster spinner bhaiya? 👀👀🤔#justkidding 🤣
— Yuzvendra Chahal (@yuzi_chahal) September 16, 2021
இவரது பதிவுக்கு கீழே, ‘வேகமான சுழற்பந்து வீச்சாளாரா?’ என யோசிக்கும்படியான எமோஜியை பதிவிட்டு, அதற்கு அருகில் ‘சும்மா விளையாடினேன்’ என சிரிக்கும் எமோஜியை சஹால் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் மறைமுகமாக தேர்வுக்குழுவை அவர் கிண்டலடித்ததாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் சஹால் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.