161 அடி உயரம், 318 தூண்கள், 'முகூர்த்த' நேரம் 32 நொடிகள்... உலகின் 3-வது 'பெரிய' இந்துக்கோயில்... மொத்த செலவு 300 கோடி!
முகப்பு > செய்திகள் > இந்தியா120 ஏக்கர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய 3-வது இந்துக்கோயிலாக அமையவுள்ளது.
31 ஆண்டு சட்ட போராட்டங்களுக்கு பின் நாளை அயோத்தியில் உலகின் மிகப்பெரிய இந்துக்கோயிலாக உருவாகவிருக்கும் ராமர் மந்திருக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. கோயிலின் நீளம் 300 அடியாகவும் அகலம் 280 அடியாகவும் உயரம் 161 அடியாகவும் இருக்கும். 20 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட வரைபடத்தில் உயரம் 141 அடியாக இருந்தது. தற்போது அது 20 அடிகள் உயர்த்தப்பட்டு 161 அடியாக மாற்றப்பட்டுள்ளது.
மூன்று தளங்களாக அமையவிருக்கும் இந்தக் கோயிலில் ஒவ்வொரு தளத்திலும் 106 தூண்கள் வீதம் மொத்தம் 318 தூண்கள் அமைய உள்ளன. பூமி பூஜை செய்யப்படும் நிலத்தில் சேர்ப்பதற்காக நாடு முழுவதும் உள்ள புனிதத் தலங்களிலிருந்து மண் மற்றும் புனித நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி ஆகியவற்றிலிருந்து தீர்த்தம் அயோத்திக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. கோயிலை கட்டி முடிக்க 300 கோடி ரூபாயும், கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையான வசதிகளை செய்ய சுமார் 1000 கோடி ரூபாயும் செலவாகும் என கணிக்கப்பட்டு இருக்கிறது.
கோயிலை கட்டி முடிக்க சுமார் 3.5 ஆண்டுகள் வரை ஆகலாம் என கூறப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நாளை நடைபெற உள்ளது. இதில் 135 சாதுக்கள் உட்பட மொத்தம் 170 முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான முகூர்த்தமாக 32 நொடிகள் குறிக்கப்பட்டுள்ளது. நாளை (5.8.2020) பிற்பகல் 12.44.08 முதல் 12.44.40 வரை இந்த முகூர்த்தம் அமைகிறது. நாளை நடைபெற இருக்கும் பூமிபூஜை நிகழ்வு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்வினை ஒட்டி தற்போது அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இதற்காக நாளை விநியோகம் செய்திட சுமார் 1.25 லட்டுகள் தயார் செய்யப்பட்டு இருக்கின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டு இருப்பதாகவும், கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் கடைபிடிக்கப்படும் எனவும் மாநில நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.