16 அடி நீளம்.. ரப்பர் தோட்டத்துக்கு போனவங்களுக்கு ஷாக் கொடுத்த ராஜநாகம்.. அரண்டுபோன குடும்பத்தினர்.. திக்.. திக்..வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலத்தில் 16 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை பார்த்து பதறிய குடும்பத்தினர், அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க, பின்னர் அந்தப் பாம்பு பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பாம்பை வனத்துறை வீரர்கள் பிடிக்கும் வீடியோ வெளியாகி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று பழமொழி உண்டு. அந்த வகையில் பாம்பை கண்டு அச்சம் கொள்ளாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பொதுவாக ஒருவரது வீட்டுக்குள் பாம்பு வந்துவிட்டால் உடனடியாக அக்கம் பக்கத்தில் ஆட்கள் திரண்டு பெரிய களேபரமே நடந்துவிடும். எதிர்பாராத வேளையில் பாம்பை பார்க்க நேரிட்டால் அது ஏற்படுத்தும் அதிர்ச்சி நம்மை விட்டு அகலவே சில மணி நேரங்கள் தேவைப்படும்.
அந்த அளவுக்கு மக்களிடையே பாம்புகள் குறித்த அச்சம் இருக்கும் நிலையில் 16 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை பார்த்தால் எப்படி இருக்கும்? சமீபத்தில் இந்த திகில் அனுபவத்தை பெற்றிருக்கிறார்கள் கேரளாவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர். கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த போத்துண்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்.
இவருக்கு உள்ளூரில் ரப்பர் தோட்டம் இருக்கிறது. இங்கே உள்ள ரப்பர் மரத்தில் ராஜநாகம் சுருண்டு படுத்திருந்திருக்கிறது. அப்போது அங்கு வந்த ராமச்சந்திரனின் குடும்பத்தினர் மரத்தில் கருப்பு நிறத்தில் ஏதோ இருப்பதை பார்த்து சந்தேகமடைந்திருக்கின்றனர். அதன் பக்கத்தில் சென்ற போதுதான் அது ராஜநாகம் என்பது அவர்களுக்கு தெரியவந்திருக்கிறது. இதனால் பதறிப்போன குடும்பத்தினர் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அந்த ராஜநாகத்தை லாவகமாக பிடித்தனர். பின்னர் அது அடர்ந்த வனப்பகுதியில் விடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தங்களது தோட்டத்தில் இரண்டு முறை இந்த ராஜநாகத்தை பார்த்ததாகவும், அப்போது அது அங்கிருந்து சென்றுவிட்டதாகவும், தற்போது அதிகாரிகளின் துணையுடன் அந்த பாம்பு பிடிபட்டிருப்பதாகவும் ராமச்சந்திரனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே 16 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வனத்துறை அதிகாரிகள் பிடிக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.