12 வருஷத்துக்கு ஒருமுறை பூக்கும் அபூர்வ பூ.. பாக்கணும்னு ஆசைப்பட்ட 87 வயசு அம்மாவை தோளில் சுமந்து மலையேறிய மகன்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் தங்களது அம்மாவின் ஆசையை நிறைவேற்ற மகன்கள் எடுத்த முயற்சி பலரையும் கண் கலங்க செய்திருக்கிறது.
12 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அரிய பூவான நீல குறிஞ்சி மலர் மேற்கு தொடர்ச்சி மலையில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பூக்கிறது. இவை தற்போது கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம், மூணாறு மலைப்பகுதி மற்றும் கல்லிப்பாறை பகுதியில் பூத்துள்ளது. அதேபோல, கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் சிக்மகளூர் பகுதியிலும் இந்த மலர்கள் தற்போது பூத்திருக்கின்றன. இந்த ஆண்டு இம்மலர்களை பார்க்காவிட்டால் அடுத்து 12 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதால் சுற்றுலாவாசிகள் இந்த மலரை பார்க்க படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் முட்டுச்சிர எனும் பகுதியை சேர்ந்த 87 வயதான எலிக்குட்டி பால் எனும் வயதான பாட்டிக்கு வெகுநாட்களாக நீலக்குறிஞ்சி மலர்களை பார்க்க வேண்டும் என ஆசை இருந்திருக்கிறது. ஆனால் அவரால் அந்த ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. இதனிடையே சமீபத்தில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்திருப்பதை அறிந்திருக்கிறார் அந்த மூதாட்டி. இதுகுறித்து தனது மகன்களிடம் சொல்லிய அவர், தனது ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
தாயின் ஆசையை கேட்ட அவருடைய இரு மகன்கள் உடனடியாக அதனை நிறைவேற்ற நினைத்திருக்கின்றனர். இதனையடுத்து கார் எடுத்து தங்களது குடும்பத்தினருடன் 100 கிலோமீட்டர் பயணித்து இடுக்கி மாவட்டத்துக்கு சென்றிருக்கிறார்கள் அவர்கள். ஆனால், அங்கே தான் அவர்களுக்கு சோதனை காத்திருந்தது. மலைப்பகுதியில் கார் செல்ல பாதை இல்லை என தெரிந்தவுடன் குடும்பத்தினர் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனாலும், தங்களது அம்மாவின் ஆசையை நிறைவேற்ற நினைத்த மகன்கள் அம்மாவை தோளில் சுமந்தபடி மலையேற நினைத்திருக்கின்றனர்.
அதன்படி, சுமார் 1.5 கிலோமீட்டர் தங்களது தாயை தோளில் சுமந்து மலையில் ஏறியுள்ளனர் இரு மகன்களும். இறுதியில் 12 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அறிய பூவினை அந்த மூதாட்டி பார்த்து நெகிழ்ச்சியடைந்திருக்கிறார். இதனை அவர்கள் வீடியோவாக வெளியிட இணையம் முழுவதும் இந்த வீடியோ ஆக்கிரமித்திருக்கிறது.