பெற்றோரை அழைத்துக் கொண்டு... 600 கி.மீ பயணம் செய்த '11 வயது' சிறுவன்... எந்த 'வண்டி'லன்னு பாருங்க!
முகப்பு > செய்திகள் > இந்தியாதபாரக் என்ற 11 வயது சிறுவன், மூன்று சக்கர வண்டியில் தனது பெற்றோர்களை வைத்துக் கொண்டு சுமார் 600 கிலோமீட்டர் மிதித்துக் கொண்டு சொந்த ஊர் வந்தடைந்த சம்பவம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன்னர், ஹரியானாவில் குர்கோவான் நகரில் இருந்து 15 வயது சிறுமி ஒருவர் காயமடைந்த தனது தந்தையை சைக்கிளில் வைத்துக் கொண்டு சுமார் 1,200 கி.மீ அழைத்துச் சென்று சொந்த ஊரான பீகார் சென்றடைந்தார். 10 நாட்கள் அந்த சிறுமி சைக்கிளை மிதித்து தந்தையை கொண்டு சேர்த்த நிலையில் இந்த சம்பவம் ஒட்டு மொத்த இந்தியாவையும் சிறுமி மீது திரும்பி பார்க்க வைத்தது.
அதே போல ஒரு சம்பவம் மீண்டும் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த இஸ்ராபில் என்பவர், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியிலுள்ள மார்பிள் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். சொந்த ஊரில் கடும் வறுமையின் மூலம் தவித்து வந்த காரணத்தால் வாரணாசியில் பணிபுரிந்து வந்த நிலையில், அங்கு ஏற்பட்ட விபத்தில் இடது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பீகாரிலுள்ள அவரது பார்வையற்ற மனைவி மற்றும் மகன் தபாரக் ஆகியோர் ஊரடங்கு ஆரம்பிப்பதற்கு முன்னர் வாரணாசி சென்றுள்ளனர்.
அப்போது ஊரடங்கு ஆரம்பித்ததன் காரணமாக வருமானம் மற்றும் உணவு இல்லாமல் இஸ்ராபில் குடும்பத்தினர் தவித்து வந்துள்ளனர். இதனையடுத்து இஸ்ராபில் தன்னிடமுள்ள மூன்று சக்கர வண்டியில் கிளம்பி சொந்த ஊர் செல்ல முடிவு செய்துள்ளார். தனது இடது காலில் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், 11 வயது மகனான தபாரக், தனது பெற்றோர்களை வண்டியில் உட்கார வைத்து, சுமார் 600 கி.மீ வரை அழைத்து சென்றுள்ளார். சுமார் 9 நாட்கள் பயணம் மேற்கொண்டு சொந்த ஊர் வந்தடைந்தனர்.
இதுகுறித்து இஸ்ராபில் கூறுகையில், 'எனது காலில் முறிவு ஏற்பட்டதால் எனது மனைவி மற்றும் மகன் வாரணாசி வந்தனர். அதன்பின்னர் ஊரடங்கும் ஆரம்பிக்க, உணவுக்கு வழியில்லாமல் தவித்து வந்தோம். இதன் காரணமாக எனது மூன்று சக்கர வண்டி மூலம் சொந்த ஊர் வந்து சேர்ந்தோம். கடவுள் மற்றும் வழியில் சில மக்களின் உதவியால் இது சாத்தியமானது' என தெரிவித்துள்ளார்.
இஸ்ராபில் மற்றும் தபாரக் ஆகியோர் அங்குள்ள அரசுப்பள்ளி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பெண்கள் தனிமைப்படுத்தப்பட்ட தனி மையங்கள் அங்கு இல்லாத நிலையில், சிறுவனின் தாயார் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அப்பகுதி எம்.எல்.ஏ ஷாநவாஸ் கூறுகையில், 'இஸ்ராபில் மற்றும் தபாரக் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வீட்டிற்கு திரும்பியதும் நேரில் சென்று சந்தித்து என்னால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்து கொடுப்பேன். இனி வாரணாசி போன்று தொலைவில் சென்று பணிக்கு செல்ல வேண்டாம். இஸ்ராபில்லிற்கு இதே பகுதியில் நல்ல ஒரு வேலையை உருவாக்கி கொடுப்பேன்' என தெரிவித்துள்ளார்.