ஏடிஎம் போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க.. இன்று முதல் அமலாகும் புதிய விதிகள்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்நாடு முழுவதும் வங்கி, ஏடிஎம் பயன்பாட்டில் இன்று முதல் பல புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

ஏடிஎம் கட்டணம், மாதச் சம்பளம் பெறுவது, மாதத் தவணை செலுத்துவது போன்றவற்றில் இன்று (01.08.2021) முதல் புதிய விதிகள் அமலாகின்றன. அதன்படி, வங்கி வேலை நாட்களில் மட்டும் இயங்கி வந்த, NACH எனப்படும் தேசிய தானியங்கி பணப்பரிவர்த்தனை முகமை இன்று முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் இஎம்ஐ கட்டணங்கள் போன்ற முக்கிய பரிவர்த்தனைகளை மேற்கொள்ள, இனி வேலை நாட்களுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. இதனால் மாதச் சம்பளதாரர்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட இனி சம்பளப் பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
மேலும் மின் கட்டணம், எரிவாயு மற்றும் தொலைபேசி கட்டணம் போன்றவற்றையும், அனைத்து நாட்களிலும் செலுத்துதற்கு ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஏடிஎம்களில் குறிப்பிட்ட இலவச சேவை போக பண பரிமாற்றத்திற்கு வசூலிக்கப்படும் கட்டணம், 15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், பணமில்லா மற்ற பரிமாற்றத்திற்கான கட்டணம், 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இலவசமாக இருந்த தபால் மூலம் வீடு தேடி வரும் வங்கி சேவைகளுக்கு, இனி கட்டணமாக 20 ரூபாயும், அதற்கான ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
