'ஒரு நிமிஷத்துல கடன்.. ஆன்லைன்லயே பெறலாம்!' - ஆசை காட்டி பின்னால் ஆப்பு வைக்கும் 1,509 ஆப்ஸ்! ‘ரிசர்வ் வங்கியிடம் குவிந்த புகார்கள்!’.. பாயும் நடவடிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆர்பிஐ அனுமதி பெறாமல் முறைகேடாக சில நிறுவனங்கள் ஆன்லைன் கடன் செயலிகளை தொடங்கி மக்களுக்கு கடன் வழங்குவதாகவும், மக்கள் கடன் வாங்கிய பிறகு அவர்களை தொடர்ந்து மிரட்டுவதாகவும் புகார்கள் தொடர்ந்து ஆர்பிஐயிடம் குவிந்து வருகின்றன.

மேற்கூறிய இந்த செயலிகளின் மூலம் இந்திய மக்களின் ஆதார், பான் கார்டு உள்ளிட்ட தகவல்களை இந்த கடன் செயலிதாரர்கள் பெற்றுக் கொள்வதாகவும், இதன்மூலம் தேச பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கப் படுவதாகவும், அதனால் இந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தொடர் கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
ஆர்பிஐ தரப்பிலிருந்து அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் கடன் செயலிகளிலிடமிருந்து இப்படி லோன் வாங்குவதை மக்கள் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்து டிசம்பர் மாதம் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தது. அத்துடன் ஆன்லைன் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் கடன்களை வழங்கும் நிறுவனங்கள் பற்றி சரிபார்த்து கொள்ளுமாறு மக்களிடம் ஆர்பிஐ வலியுறுத்தியது. இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவின் பேரில் முறைகேடான ஆன்லைன் கடன் செயலிகள் பலவற்றை கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கி விட்டது. அதன் பிறகும் கூட இப்படியான ஆன்லைன் மோசடிகள் தொடர்கின்றன.
இதனிடையே முறைப் படுத்தப்படாத 1,019 டிஜிட்டல் கடன் வழங்கும் செயலிகள் மற்றும் டிஜிட்டல் கடன் வழங்கலில் ஈடுபட்ட 490 பதிவு செய்யப்பட்ட என்.பி.எப்.சி.க்கள் மீது ரிசர்வ் வங்கிக்கு வந்த புகார்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒழுங்கு படுத்தப்படாத கடன் வழங்கும் நிறுவனங்களை ஆய்வு செய்வதற்கு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.
இதேபோல் பி.எம்.ஜே.டி.ஒய் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை காப்பீடு திட்டத்திற்காக, சுமார் 30.69 கோடி ரூபே கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் கீழ் செயல்படும் மொத்த கணக்குகளில் 80% கணக்கிகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். தகுதியான வங்கி கணக்குகள் நேரடி நன்மைகளை பெறுவதாகவும் அமைச்சர் அனுராக் தாக்கூர் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

மற்ற செய்திகள்
