'ஒவ்வொரு நொடியும் கையை விட்டு நழுவும் வாய்ப்பு'!.. இங்கிலாந்து டெஸ்ட்டில் இந்திய அணிக்கு தொடரும் நெருக்கடி!.. கலக்கத்தில் சூர்யகுமார், ப்ரித்வி ஷா!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக ப்ரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இலங்கையில் இருந்து செல்லவுள்ளனர். ஆனால், அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்ததால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
இந்திய அணி வெற்றி பெறுவதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் சூழலில் தான் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது ஓப்பனிங் வீரர் சுப்மன் கில் காயத்தால் பாதிக்கப்பட்டார். இதே போல இந்திய அணிக்கு முதல் தர பயிற்சிகள் வழங்குவதற்காக கவுண்டி அணிகளுடன் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டியின் போது, வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் ஆகியோர் காயமடைந்தனர். இதனால் இந்த 3 வீரர்களும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
இந்நிலையில், இந்த 3 வீரர்களுக்கு மாற்றாக ப்ரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை இங்கிலாந்து டெஸ்டுக்கு அழைப்பு விடுத்துள்ளது பிசிசிஐ. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. ப்ரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவருமே தற்போது இலங்கை தொடரில் பங்கேற்றுள்ளனர். 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடர் நிறைவடைந்துவிட்டதால் அவர்களின் போட்டி தேதிகளில் எந்த சிக்கலும் இல்லை.
ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அவர்களின் பயணத்தை தடை செய்ய வாய்ப்புள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இலங்கை தொடரின் போது, இந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்திய அணியில் 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோரும் அடங்குவர்.
இங்கிலாந்து டெஸ்ட்டில் பங்கேற்க வேண்டும் எனில், இரு வீரர்களுக்கும் 3 முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு மூன்றிலுமே நெகட்டிவ் என முடிவுகள் வர வேண்டும். எனவே, இன்னும் 3 நாட்களுக்குள் சூர்யகுமார் யாதவ் மற்றும் பிரித்வி ஷா இருவருக்கும் பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்துவிடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.