‘வேலைக்கு லேட்டான அவசரத்தில் வண்டியை சரியா பூட்டாம சென்ற பெண்’!.. திடீரென செல்போனுக்கு வந்த 10 மெசேஜ்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் ஆடை வடிவமைப்பாளரின் ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் உள்ள பிரபல துணிக்கடையில் பெண் ஒருவர் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2-ம் தேதி வழக்கம்போல தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளார். அவரது வாகனத்தின் இருக்கைக்கு கீழே வங்கி பாஸ் புத்தகம், ஏடிஎம் கார்டு மற்றும் இதர அடையாள அட்டைகள் அடங்கிய பையை வைத்திருந்துள்ளார்.
இந்த நிலையில் அன்று வேலைக்கு சற்று தாமதமாக வந்ததால், அவசரத்தில் வண்டியை சரியாக பூட்டாமல் சென்றுள்ளார். இதனை அடுத்து அலுவலத்தில் மாலை வேலை செய்துகொண்டிருக்கும்போது அவரது செல்போனுக்கு வரிசையாக 10 மெசேஜ் வந்துள்ளது. அதில், தனது வங்கி ஏடிஎம் கார்டு மூலம் ரூ.10 ஆயிரம் வீதம் 10 முறை மொத்தமாக 1 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனே அடையாறு துணை ஆணையர் விக்ரமன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து எந்த ஏடிஎம் மையத்தில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்த போலீசார், உடனே அங்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொப்பி, கண்ணாடி அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்து ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பது பதிவாகியுள்ளது. இதனை அடுத்து இருசக்கர வாகனத்தின் எண்ணைக் கொண்டு அந்த நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர், குரோம்பேட்டை நாகல்கேனி பகுதியைச் சேர்ந்த முகமது இம்ரான் (39) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் மீது கடந்த 2017-ம் ஆண்டு நகைப்பறிப்பு வழக்கு பதிவாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.
ஏடிஎம் பின் நம்பர் தெரியாமல் பணத்தை திருடியது எப்படி என முகமது இம்ரானிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தை உடைத்து திருடியதில் ஏடிஎம் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், அடையாள அட்டைகள் இருந்துள்ளன. இதனை அடுத்து ஏடிஎம் கார்டு மூலம் பணத்தை திருடுவதற்காக முகமது இம்ரான் ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால் ஏடிஎம்-ன் பின் நம்பர் தெரியாததால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. அப்போது வங்கிக் கணக்கு புத்தகத்துக்குள், ஏடிஎம் கார்டு முதன்முதலில் வங்கியில் இருந்து அனுப்பப்பட்ட பின் நம்பருடன் கூடிய பேப்பர் இருந்துள்ளது. அதில் உள்ள எண்ணை ஏடிஎம் மிஷினில் முகமது இம்ரான் பதிவிட்டுள்ளார். ஆனால் அந்த பின் நம்பர் தவறு எனக் காட்டியுள்ளது. இதன்பின்னர் அந்த பெண்ணின் அடையாள அட்டை ஒன்றில் இருந்த அவரது பிறந்த வருடத்தை எடுத்து ஏடிஎம் மிஷினில் பதிவிட்டுள்ளார். அது சரியாக காட்டியதால் சந்தோஷமடைந்த முகமது இம்ரான், ரூ. 10 ஆயிரமாக ரூ. 1 லட்சம் வரை திருடியது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து முகமது இம்ரானிடமிருந்து ஏடிஎம் கார்டு மூலம் திருடப்பட்ட பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனத்தின் சீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருளை திருடுவதை வழக்கமாக கொண்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், ஏடிஎம் கார்டு பின் நம்பரை பர்சில் எழுதி வைப்பது, துண்டு சீட்டில் எழுதி வைப்பது போன்றவை தவறான செயல் என்றும், சுலபமாக ஏடிஎம் பின் நம்பரை கண்டுபிடிக்கும்படி வைக்க கூடாது என்றும் அடையாறு காவல்துறை துணை ஆணைர் விக்ரமன் அறிவுறுத்தியுள்ளார்.